
விசாகப்பட்டினத்தில் ஹெச்பிசிஎல் தொழிற்சாலையிலிருந்து அடர்த்தியான புகை வெளியேறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த சம்பவம் குறித்து எச்பிசிஎல் பிரதிநிதிகள் கூறுவது என்னவென்றால்… குரூட் ஆயில் சுத்தம் செய்யும் பிரிவில் வீணான படிமங்கள் படிந்து போய் உள்ளன. அவற்றை சுத்தம் செய்யும் போது புகை வெளியேறுகிறது என்றார்கள்.
எல்ஜி பாலிமர்ஸ் மூலம் விஷ வாயு வெளியாகி சிலர் உயிரிழந்த சம்பவம் மறந்து போகும் முன்பே விசாகப்பட்டினத்தில் மீண்டும் ஒருமுறை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்காபுரத்தில் உள்ள எச்பிசிஎல் ரீபைனரி யிலிருந்து அடர்த்தியான புகை வெளிவந்தது. வெண்மையான புகை பெருமளவில் எழுந்து சுற்றுப்புற இடங்களில் எல்லாம் சூழ்ந்து கொள்ளவே உள்ளூர் மக்கள் பயந்து அச்சத்துக்கு ஆளானார்கள். என்ன நிகழ்கிறது என்று புரியாமல் அச்சத்தோடு வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ஹெச்பிசிஎல் அதிகாரிகள் அறிக்கை ஒன்றினை உடனே வெளியிட்டார்கள். குரூட் ஆயில் சுத்தம் செய்யும் யூனிட்டில் வீண் பொருட்கள் படிந்து போய் உள்ளன. அவற்றை அகற்றும் போது புகை வெளிவருகிறது என்று கூறினார்கள்.
உஷ்ணம் அதிகமாவதால் உடனுக்குடன் எச்சரிக்கை அடைந்து அவற்றை குறைத்தோம் என்று கூறினார்கள். இந்தப் புகையினால் யாருக்கும் எப்படிப்பட்ட ஆபத்தும் ஏற்படாது என்று அவர்கள் உடனே மக்களுக்கு தெளிவு படுத்தினார்கள்.

இரண்டு மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு அங்கு சாதாரண சூழ்நிலையே நிலவியது. எனவே மக்கள் பயப்பட வேண்டிய தேவையில்லை என்றார்கள்.
மே 7-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் மிகப் பெரும் விபத்து நேர்ந்தது. ஆர்ஆர் வெங்கடாபுரத்தில் எல்ஜி பாலிமர்ஸில் இருந்து ஸ்டெரீன் விஷவாயு லீக் ஆகி 12 பேர் இறந்து போனார்கள். நூற்றுக்கணக்கான பேர் உடல்நலக் குறைவிற்கு உள்ளானார்கள். விஷ வாயுவை சுவாசித்ததால் உள்ளூர் மக்கள் அங்கிருந்தவர்கள் அங்கேயே ரோட்டிலேயே மயக்கமடைந்து விழுந்தார்கள்.
வாயுக் கசிவு ஏற்பட்ட சம்பவத்தால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திரப் பிரதேச அரசாங்கம் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அளித்தது. வென்டிலேட்டர் மீது சிகிச்சை பெறுபவர்களுக்கு 10 லட்சமும், இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை தேவை இருந்தவர்களுக்கு 25 ஆயிரமும் அளித்தார்கள். விஷ வாயு தாக்கத்தால் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரம் ரூபாய் பொருளாதார உதவி அளித்ததார்கள்.

கால்நடைகளை இழந்தவர்களுக்கு 20,000 ரூபாயும் அளித்தார்கள். அப்போது அந்த கிராமத்தில் இருந்த பல மரங்களும் பச்சைப் பசேலென்ற பழ மரங்களும் பூக்களும் கருகி சாம்பல் ஆனது. அங்கிருந்த நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் குடிக்க வேண்டாம் என்றும் பசுக்களில் இருந்து பால் கறக்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் பட்டிருந்தார்கள்.