
பெங்களூரு விமான நிலையத்தில் இன்று ஒரு உருக்கமான காட்சியை அனைவரும் காண நேர்ந்தது. 5 வயதுப் பையன் ஒருவன் தான் அந்த உணர்ச்சிமிகு காட்சியின் நாயகன். தனது தாயாரைக் காண்பதற்காக டெல்லியிலிருந்து விமானத்தில் தனியாக பறந்து வந்துள்ளான் இந்த குட்டிப் பையன்.
லாக்டவுன் காரணமாக பல குடுங்கள் நாடு முழுவதும் பிரிந்து கிடக்கின்றன. தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்து தத்தமது குடும்பங்களை நோக்கி போய்க் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் சோகக் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் இன்று முதல் உள்ளூர் விமான சேவையை அரசு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று பெங்களூர் விமான நிலையம் உருக்கமான காட்சியைக் காண நேரிட்டது.
விஹான் சர்மாவின் தாயார் பெங்களூரில் இருக்கிறார். விஹான் தில்லியில் மாட்டிக் கொண்டான். இடையில் வந்த கொரோனா வைரஸ் பரவலால் லாக் டவுன் அடுத்தடுத்து அமலாக்கப்பட்டு வந்ததால் விஹானும், தாயாரும் தொடர்ந்து பிரிந்திருக்கும்படி ஆனது. தாயைக் காண முடியாமல் பார்க்க முடியாமல் ஏங்கிப் போய் விட்டான் விஹான். தாய்க்கும் அதே உணர்வுதான்.

இந்த நிலையில்தான் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து விஹான் தனது தாயாரைக் காண பெங்களூருக்குப் போக முடிவு செய்தான். அதற்கு விஹான் குடும்பத்தினரும் சம்மதிக்கவே விஹான் தன்னந்தனியாக தில்லியிலிருந்து கிளம்பினான். அவனது நிலை அறிந்து அவனுக்கு ஸ்பெஷல் கேட்டகிரி டிக்கெட் கொடுத்தனர் அதிகாரிகளும்.

தில்லியிலிருந்து விமானம் ஏறி தனியாகவே மற்ற பயணிகளுடன் சேர்ந்து பெங்களூர் வந்து சேர்ந்தான் விஹான். விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து தனது மகனைப் பார்த்து பூரித்துப் போன அவனது தாயார், வாரி எடுத்து மகனை அணைத்துக் கொஞ்சினார். அந்த இடமே உருக்கமாக மாறியது. மகனைப் பிரிந்திருந் தாயின் ஏக்கம் அந்த இடத்தில் மறைந்து மகிழ்ச்சி குடியேறியது.
மஞ்சள் நிற டிரஸ்ஸும், கையில் ப்ளூ கலர் கிளவுஸுமாக ஸ்மார்ட்டாக காணப்பட்ட விஹானுக்கு 2 மாதம் கழித்து அம்மாவைப் பார்த்ததும் அத்தனை மகிழ்ச்சி. பார்க்கவே கலர்புல்லாக இருந்தது இந்த காட்சி. இதுகுறித்து விஹானின் தாயார் கூறுகையில், எனது 5 வயது மகன் விஹான் சர்மா, என்னைக் காண்பதற்காக தில்லியிலிருந்து தனியாக விமானத்தில் வந்துள்ளான். 3 மாதம் கழித்து எனது மகனைப் பார்க்கிறேன் என்று கூறினார்