
கொரோனா நோய்த் தொற்று காரணமாக உலகத்தின் செயல்பாடுகளில் பல மாற்றங்கள். ஜூன் 1-ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் கேரள அரசு விக்டரி சானல் மூலம் கடந்த 1-தேதி முதல் ஆன்லைன் வழியாக வகுப்புக்களை தொடங்கியுள்ளது. முதல்நாள் வகுப்பில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியை ஸாயி ஸ்வேதா தீலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளார்.
ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘மிட்டுப்பூனை, தங்கு பூனை’ கதையைக் குழந்தைகளுக்கான முகபாவனைகளுடன் அழகாக வர்ணிக்கும் அவரது வீடியோக்களை வலைதளத்தில் கொண்டாடி மகிழ்கின்றனர் மலையாளிகள். ஒரே நாளில் வைரலான கேரள மாநிலம் கோழிக்கோடு முதுவடத்தூர் வி.வி.எல்.பி. ஸ்கூல் டீச்சரான ஸாயி ஸ்வேதா, உலக மலையாளிகளால் `தங்கு பூனை’ என அழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.
அதே சமயம் சிலர் வலைதளங்களில் ஸாய் ஸ்வேதா-வை கிண்டல் செய்தும் பதிவுகளைப் போட்டு வருகின்றனர். இதுகுறித்து கேரள சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி போலீஸார் நான்கு மாணவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஸாயி ஸ்வேதா கூறுகையில், `என் தங்கு பூனை கதையை அங்கீகரித்த அனைவருக்கும் நன்றி.
டோரா புஜ்ஜி போனது தங்கு பூனை வந்தது’ என்பதுபோன்ற கமென்டுகளை வலைதளங்களில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயம், ஆசிரியர் என்றும் பார்க்காமல் சிலர் மோசமான கமென்டுகளைப் போட்டுள்ளனர்.
வெளி நாட்டில் வேலை செய்யும் என் கணவர் திலீப், இதுபோன்ற மோசமான சில கமென்டுகளைக் கண்டு பின்வாங்க வேண்டாம் என்று தைரியம் கொடுத்தார். சிறப்பாகப் பாடம் நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மக்கள் பாராட்டு அளிக்க வேண்டும்” என்றார். இது ஒருபுறம் இருக்க ஸாயி ஸ்வேதாவுக்கு ஆதரவாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் குரல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கே.கே.சைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் வழியாகப் பாடம் நடத்தும் ஆசிரியர் குறித்து சமூக வலைதளங்களில் தவறாகப் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகமே கொரோனாவால் முடங்கிப்போயுள்ள இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் முன் மாதிரியாக நாம் ஆன்லைன் வகுப்பு நடத்துகிறோம். ஆன்லைன் வகுப்பு நடத்திய ஆசிரியைகளை அனைவரும் பாராட்டும்போது சிலர் அவரை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாகச் செயல்படும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்பு எடுக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நாம் பக்கபலமாக இருப்போம்” என்றார்.