
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வெளிவரும் தெலுங்கு சப்தகிரி மாத இதழில் ஏப்ரல் மாதம் ராமாயணம் குறித்து வக்கிரமாக ஒரு கதை வெளி வந்துள்ளது என்று பிஜேபி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
சீதாதேவிக்கு லவன் ஒரு மகன் தான் என்றும் குசன் தர்ப்பையால் செய்த பொம்மை என்றும் ஒரு கதை சப்தகிரி ஏப்ரல் மாதம் 41 ஆம் பக்கத்தில் பிரசுரமாகி உள்ளது. இந்த கதையை திருப்பதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் புனித் என்ற மாணவர் எழுதியுள்ளார்.
இது குறித்து பிஜேபி தலைவர்கள் எதிர்ப்பும் மறுப்பும் தெரிவித்துள்ளார்கள். டிடிடி போன்ற தார்மீக அமைப்பு வால்மீகி இராமாயணத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். நாட்டுப்புறக் கதைகளில் பல்வேறு பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் ராமாயணத்தை தவறான வழியில் சித்தரிக்கும் அபாயம் உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் ராமாயணத்தை தவறாக சித்தரிக்கும் கதை பற்றி பக்தர்களும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
சப்தகிரி மாதப் பத்திரிகை பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளது என்றும் உண்மைக்கு மாறாக இவ்வாறு கட்டுக்கதைகளை வெளியிடுவது நல்லதல்ல என்றும் பிஜேபி, திதிதே அதிகாரிகளுக்கு தெரிவித்தது.
யாரோ ஒரு மாணவன் எழுதியதாக ஒரு கதையை சப்தகிரி போன்ற ஆன்மீக இதழில் வெளியிட்டது பற்றி கேள்வி எழுப்பி உள்ளது. லவன் மட்டுமே சீதைக்கும் ராமனுக்கும் பிறந்த மகன் என்றும் குசன் வால்மீகி சிருஷ்டித்த பொம்மை என்றும் எழுதி உள்ளது குறித்து பிஜேபி கேள்வி எழுப்புகிறது.
சீதை வால்மீகி ஆசிரமத்தில் இருந்த போது லவனை மகரிஷியின் பாதுகாப்பில் இருத்தி விட்டு குளிக்கச் சென்றாள். வால்மீகி பூஜையில் இருந்தபோது ஒரு குரங்கு லவனைத் தூக்கிச் சென்று விட்டது. அதனால் சீதை திரும்பி வருவதற்குள் வால்மீகி தர்ப்பையால் (குச என்றால் தர்பை) ஒரு குழந்தையை சிருஷ்டி செய்து அதற்கு உயிரூட்டினார். குரங்கு லவனை குளக்கரையில் விட்டுச் சென்றது. சீதை குழந்தையோடு திரும்பி வந்தபோது ஆசிரமத்தில் இன்னொரு குழந்தை இருப்பதை பார்த்து அதையும் தன் மகன் போல் வளர்த்தாள் என்று கதைக்கிறது இந்த கதை.
இது உண்மையல்ல என்பதற்கு வால்மீகி எழுதிய உத்தர ராமாயணமே நமக்கு ஆதாரம் என்று பிஜேபி தலைவர்கள் தெரிவித்தனர்.
கோடிக்கணக்கான பக்தர்கள் வால்மீகி ராமாயணத்தைப் படித்த தம் சந்ததியினருக்கு கற்றுத் தரும் நிலையில் இது போன்ற கதைகளை ஆன்மிக பத்திரிக்கையான சப்தகிரியில் பிரசுரிப்பது நல்லது அல்ல. இது ராம பக்தர் களின் மனதுக்கு வருத்தம் அளிக்கிறது. இந்துக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்றே இதுபோன்ற கதையை வெளியிட்டு உள்ள சப்தகிரி எடிட்டர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை வேலையிலிருந்து நீக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் மீது துறை சம்பந்தப்பட்ட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்றவை நிகழாவண்ணம் பக்தர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்று பிஜேபி கோரிக்கை வைத்தது.