
போனாலு பண்டிகையின் திருவிழாக்கள் ரத்து. போனாலு பண்டிகை இரட்டை மாநகரில் ஜூன் 28 ஞாயிறன்று தொடங்கி ஜூலை 19 ஞாயிறன்று நிறைவு பெறுகிறது. ஆஷாட ஜாத்ரா என்றழைக்கப்படும் போனாலு தெலங்காணாவின் அரசுத் திருவிழா. ஒவ்வொரு வாரம் நகரின் ஒவ்வொரு கோவிலில் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு போனாலு பண்டிகையின் திருவிழாக்கள் ரத்து.…
இம்முறை வீட்டிலேயே போனம் சமர்ப்பிக்கவேண்டும்.
கரோனா வைரஸ் கேசுக்கள் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருவதால் தெலங்காணா மாநிலம் முக்கியமான முடிவு எடுத்துள்ளது.
சமுதாயம் ஒன்று கூடி போனாலு திருவிழா கொண்டாடுவதை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரட்டை மாநகரில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் இந்த முறை களை இழந்து காணப்படும்.
இரட்டை மாநகரில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட மாதத்தில் தென்படும் போனாலு பரபரப்பு இந்த முறை இல்லை என்றே கூறலாம். இம்முறை வீடுகளிலேயே போனம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் தலசானி ஸ்ரீநிவாஸ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலின் காரணமாக இந்த வருடம் சமூகமாக போனாலு திருவிழாக்கள் செய்வதை ரத்து செய்துள்ளதாக புதன்கிழமை ஜூன் 10ம் தேதி அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
கோவில்களில் அம்மனுக்கு பூசாரிகள் மட்டுமே போனாலு சமர்ப்பிப்பார்கள் என்று கூறினார். மக்கள் அவரவர் வீடுகளில் அவரவர் வீட்டு தெய்வங்களுக்கு போனாலு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோவில் வளாகத்தில் பூஜாரிகள் கடங்கள் எனப்படும் கலசங்களை ஊர்வலம் எடுத்துச் செல்வர் என்றும் அமைச்சர் கூறினார். அம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள் கூட பூசாரிகளே சமர்ப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார். அரசாங்க உத்தரவை இரட்டை மாநகர மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களுக்குள் கரோனா கேசுகள் மிக அதிகமாக பரவி வரும் பின்னணியில் இம்முறை போனாலு திருவிழாக்களை ஆடம்பரமாக நடத்த வேண்டாம் என்று தெலங்காணா மாநிலம் முடிவெடுத்துள்ளது.
அமைச்சர்களும் அதிகாரிகளும் இந்த அம்சத்தின் மீது கலந்துரையாடி முடிவெடுத்துள்ளனர் . கோவில்களில் போனாலு சமர்ப்பிப்பதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானித்துள்ளார்கள்.
போனம் என்றால் போஜனம். அம்மனுக்கு நைவேத்தியமாக போஜனம் அளிப்பது போனாலு எனப்படுகிறது. தெலங்காணாவில் பழங்காலம் முதல் இந்த பண்டிகையை மிக அமர்க்களமாக உற்சாகமாக நிர்வகித்து வருவது வழக்கம். தெலங்காணா தனி மாநிலம் ஏற்பட்ட பிறகு அரசாங்கம் போனாலு பண்டிகை யை அதிகார பண்டிகையாக அறிவித்தது.

மழைநாளில் வியாதிகள் வரக் கூடாது என்ற கோரிக்கையோடு அம்மனுக்கு நைவேத்தியம் சமர்ப்பிப்பார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தலைவிரித்தாடும் வேளையில் ஊர்வலங்களும் கூட்டமாகச் சேர்ந்து செய்யும் பூஜை நிகழ்ச்சிகளும் நிர்வகிப்பது சரியல்ல என்று பலரும் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் சேர்ந்து அவரவர் வீட்டிலேயே அம்மனுக்கு நைவேத்தியம் சமர்ப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆலயங்களில் மக்கள் ஒன்றுகூடி சமர்ப்பிக்காததால் எந்த தோஷமும் வராது என்றும் பண்டிதர்கள் தெரிவித்தார்கள்.
- ராஜி ரகுநாதன், ஹைதராபாத்