
ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் வசூலிக்கப்படாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி., கவுன்சிலின் 40வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்துக் கூறிய போது,

ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது. வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் கணக்கு தாக்கலின் போது தாமதமானாலும் அபராதம் இருக்காது. கொரோனா தாக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள தொழில் முனைவோருக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
2017 ஜூலை முதல் 2020 ஜனவரி வரையிலான காலத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யாதவர்கள், வரி செலுத்த வேண்டியது இல்லாமல் இருந்தால் தாமதக் கட்டணம் இன்றி செப்டம்பர் இறுதி வரை அறிக்கை தாக்கல் செய்யலாம்.
2017 ஜூலை முதல் 2020 ஜனவரி வரையிலான காலத்துக்கு வரி செலுத்த வேண்டி இருப்பவர்கள், அறிக்கை தாக்கல் செய்யாமல் இருந்தால், தாமதக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்தி செப்டம்பர் இறுதி வரை அறிக்கை தாக்கல் செய்யலாம்.
ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் வரை விற்று முதல் கொண்ட நிறுவனங்கள் நடப்பாண்டின் மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான அறிக்கையை செப்டம்பர் இறுதி வரை தாமதக் கட்டணம் இன்றித் தாக்கல் செய்யலாம்… என அறிவித்தார்.