
புது தில்லி: 15ஆவது அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. 1931ல் பிறந்தவர் இவர். சென்னை பார் கவுன்சிலில் 25 வருட அனுபவம் பெற்றவர். சென்னையில் இருந்து தில்லிக்கு பின்னர் சென்றார்.
தற்போதைய அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தஹியின் பதவிக் காலம் 2017 ஜூன் 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதன் பின்னரான பணி நீட்டிப்பை அவர் விரும்பவில்லை. எனவே, சில நாட்களுக்கு முன்னர் தன் பதவியை ராஜினாமா செய்து, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதை அடுத்து அடுத்த தலைமை வழக்கறிஞரை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தில்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.
மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி தில்லி திரும்பியதும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு உள்ள அனுபவம் மற்றும் திறமை ஆகியவையும், சட்ட நிபுணர்களுடனான தொடர்பு ஆகியவையுமே அவர் பெயர் பரிசீலனையில் இருக்கிறது என்றும், அவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கியுள்ளது என்றும் தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



