
லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப் பட்டுள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
லடாக் பகுதியில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களது பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம், கால்வான் பள்ளத்தாக்கில் அத்துமீறி சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இரண்டாம் உலகப் போரில் ரஷியா வெற்றி பெற்ற 75ஆம் ஆண்டு வெற்றி தினம் ஜூன் 24 ஆம் தேதி மாஸ்கோவில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் அரசு முறை பயணமாக நாளை மாஸ்கோ புறப்பட்டுச் செல்கிறார்.
முன்னதாக முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படைகளின் தளபதிகளுடன் லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் ராஜ்நாத் சிங் இதுகுறித்து தெரிவிக்கையில், எல்லையில் இந்திய படைகள் தயார் நிலையில் உள்ளன. லடாக் எல்லையில் சீனா அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க இந்தியப் படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனப் படைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றார்.
இரண்டாவது உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, ஒரு வெற்றி விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. விழாவில் பங்கேற்க பாரத ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ரஷ்யா செல்லவுள்ளார். இந்த விழாவில் சீனா சார்பிலும் பங்கேற்கின்றனர். இருப்பினும் இரு தரப்புக்கும் இடையே எந்த விதப் பேச்சும் நடைபெறாது என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
