di
சென்னை:
வன்முறையாளர்களை நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
வானொலி வாயிலாக உரை நிகழ்த்தும் மோடியின் மன் கீ பாத் – மனதின் குரல் நிகழ்ச்சியில், மோடி இன்று பேசினார். மனதின் குரல் – 27.8.17 நிகழ்ச்சியில் பேசிய அவரின் உரையின் தமிழாக்கம்:
எனதருமை நாட்டுமக்களே, மரியாதைக்குரிய வணக்கங்கள். ஒருபுறம் நாடு கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறது, வேறொருபுறம், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பற்றிய செய்தி வரும் பொழுது, தேசத்தில் கவலை ஏற்படுவது இயல்பான விஷயம் தானே. இந்த நமது தேசம் புத்தரும் காந்தியும் பிறந்த தேசம், தேசத்தின் ஒற்றுமைக்காக முழுமனத்தோடு ஈடுபட்ட சர்தார் படேல் பிறந்த மண்ணிது. பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள், பொதுவாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை விழுமியங்களுக்காகவும், அஹிம்ஸைக்காகவும், பெருமதிப்பு அளித்து வந்திருக்கிறர்கள், நமது மனங்களிலும் இது நிறைந்திருக்கிறது. அஹிம்ஸா பரமோதர்ம: – இந்த வாக்கியத்தை நாம் நம் சிறுவயது முதற்கொண்டே கேட்டு வந்திருக்கிறோம், கூறியும் வந்திருக்கிறோம்.
நம்பிக்கை பெயரால் வன்முறையை நம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று நான் செங்கோட்டையிலிருந்து கூட கூறியிருந்தேன். அது மதம் தொடர்பான நம்பிக்கையாகட்டும், அரசியல் எண்ணப்பாடு தொடர்பான நம்பிக்கையாகட்டும், தனிநபர் மீது கொண்ட நம்பிக்கையாகட்டும், மரபுகள்-பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கையாகட்டும் – நம்பிக்கையின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை. டா. பாபா சாஹேப் அம்பேட்கர் நமக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை அளித்திருக்கிறார்; அதில் ஒவ்வொருவருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து விதமான அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொள்பவர்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றுபவர்கள் – அவர்கள் தனிநபர்களாகட்டும், ஒரு சமுதாயத்தினர் ஆகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், இந்த தேசமும் அதை எப்போதும் பொறுத்துக் கொள்ளாது, எந்த அரசும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன்பு தலைவணங்கித் தான் ஆக வேண்டும், சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும், சட்டம் தான் முடிவு செய்யும், சட்டம் கண்டிப்பாக தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கியே தீரும்.
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் பன்முகத்தன்மைகள் நிறைந்தது; இந்தப் பன்முகத்தன்மை உணவுப் பழக்கம், வசிக்குமிடங்கள், உடுக்கும் உடை என்பதில் மட்டும் காணப்படுவதில்லை; வாழ்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இந்தப் பன்முகத்தன்மை காணப்படுகிறது. எந்த அளவுக்கு இது இருக்கிறது என்றால், நமது பண்டிகைகளிலும் இது நிறைந்திருக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்பதால், நமது கலாச்சாரப் பாரம்பரியமாகட்டும், சமூகப் பாரம்பரியமாகட்டும், வரலாற்று நிகழ்வுகளாகட்டும், ஆண்டின் 365 நாட்களில் ஏதாவது ஒரு பண்டிகையோடு தொடர்பில்லாத ஒரு நாளைக் காண்பது அரிதான விஷயமாக இருக்கும். நமது அனைத்துப் பண்டிகைகளும் இயற்கையின் அட்டவணைக்கு ஏற்பவே அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவையனைத்தும் இயற்கையோடு நேரடித் தொடர்பு கொண்டிருப்பவை. நமது பல பண்டிகைகள் விவசாயிகளோடும், மீனவர்களோடும் தொடர்புடையவையாக இருக்கின்றன.



