
சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியில் இருந்து அவரை நீக்கி, தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். எடப்பாடிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.செல்வம் சேலம் புறநகர் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எங்களை நீக்க டி.டி.வி தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஜி.வெங்கடாச்சலம் பேட்டி அளித்துள்ளார். மேலும் டி.டி.வி தினகரன் செயல்பாடு சிறு பிள்ளைத்தனமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஜி.வெங்கடாச்சலத்தை நீக்கி டி.டிவி அறிவித்தது குறிப்பிடத்தக்கது
எம்.பி குமார் சவாலினால் எடப்பாடி கட்சி பதவி காலி என்று கூறப்படுகிறது.
முன்னதாக, அவர், தைரியமிருந்தால், கட்சிப் பதவியிலிருந்து முதலமைச்சரை நீக்குங்கள் என சவால் விடுத்திருந்தார். அவரது சவாலை ஏற்ற தினகரன் முதலமைச்சரின் கட்சிப் பதவியைப் பறித்துள்ளார்.
வருங்காலங்களில் சவால் விட எவரும் பயப்பட வேண்டும் என்ற ரீதியில் தினகரன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு எதிர்பார்த்தபடி, எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியில் இருந்து எந்த விதத்திலும் பொறுப்பில் இல்லாத தினகரனால் நீக்கப் பட்டிருக்கிறார்.
எல்லாம் சசிகலாவின் ஒப்புதலுடன் செய்யப் படுவதாக தினகரன் கூறியுள்ளார். எனவே, சசிகலாவை நேற்று அல்லது அண்மையில் அவர் சென்று பார்த்து பேசி ஒப்புதல் வாங்கினாரா? அல்லது தொலைபேசியில் கேட்டு வாங்கினாரா? தொலைபேசியில் என்றால், ரூபா குற்றம் சாட்டியது மேலும் உறுதியாகிவிடும்!
.
இன்னும் தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச் செயலர் என்ற பொறுப்பில், சர்ச்சைக்குரியது என்றே (டிஸ்பியுட்) பதிவு செய்துள்ளது. இவ்விதம், சர்ச்சைக்குரிய ஒருவர் நியமிக்கப்பட்ட விதமே சர்ச்சைக்குரியது எனும் நிலையில், சர்ச்சைக்குரிய ஒருவர் நியமித்த து.பொ.செ., கட்சிப் பொறுப்பும் சர்ச்சைக்குரியது எனும் நிலையில், கட்சியின் பொதுச் செயலர் பதவியே சர்ச்சையில் உள்ளது; அல்லது பொதுச் செயலர் பதவியே இல்லை எனும் நிலையில் ஒருவர் இவ்வாறு தன்னிச்சையாக அறிவிக்க இயலுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், கட்சியின் மற்ற முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் எல்லாம் ஆட்சியில் அங்கம் வகிக்கும் எடப்பாடி குழுவின் பின்னால் உள்ளனர் என்ற நிலையில் இவ்விதமான அறிவிப்பு ஒரு நபர், தன்னிச்சையாக உள்ளே புகுந்து ஒரு கட்சியின் உறுப்பினர்களை நீக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தினகரன், தனது ஆதரவாளர்களை வைத்து, ஜாதி ரீதியாக சட்டமன்ற உறுப்பினர்களை தொலைபேசியில் மிரட்டி தனக்கு ஆதரவாக வர வைக்க, ஒன்று சேர்க்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொங்கு பகுதி சட்ட மன்ற உறுப்பினர்கள் எடப்பாடியின் பின்னால் உள்ளபோது, சட்ட மன்ற உறுப்பினர் நீதிபதியிடம் தினகரன் ஆதரவாளர் தொலைபேசியில் ஜாதி ரீதியாக நீங்கள் தினகரனுக்கு ஆதரவு தர வேண்டும் என மிரட்டும் ஆடியோ பதிவு வெளியானது.



