பிரதம மந்திரி முத்ரா திட்டம், Start Up திட்டம், Stand Up திட்டம் – இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பழங்குடி இனத்தவர்களாகட்டும், பெண்களாகட்டும், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்களாகட்டும், சொந்தக் கால்களில் நின்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களாகட்டும், அப்படிப்பட்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்படி, வங்கிகளிடமிருந்து எந்த வித பிணையும் இல்லாமல், பணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது; அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதோடு மட்டுமல்லாமல், ஒன்றிரண்டு பேர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வெற்றிகரமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடந்த நாட்களில் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர், என்னை சந்திக்க வந்திருந்த போது, ஜன் தன் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள், RuPay அட்டை, பிரதம மந்திரி முத்ரா திட்டம் ஆகியவை காரணமாக, சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் பயன் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றியதொரு ஆய்வை அவர்கள் மேற்கொண்ட போது, உத்வேகம் அளிக்கக் கூடிய பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்று சொன்னார்கள். இன்று அதிக நேரமில்லை ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டிப்பாக MyGov.in தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும் என்று நான் வங்கிப் பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்; இதனை மக்கள் படித்து உத்வேகம் அடைவார்கள்.
எப்படி ஒரு திட்டம் ஒரு நபரின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, எப்படி புதிய சக்தியை நிரப்புகிறது, புதியதொரு நம்பிக்கையை தோற்றுவிக்கிறது என்பனவற்றுக்கான ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் என் முன்னே வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர, நான் முழு முயற்சிகளையும் மேற்கொள்வேன்; ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் கூட, இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிகழ்வுகள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. அவர்களும் இப்படிப்பட்ட நபர்களோடு நேர்காணல்கள் நிகழ்த்தி, புதிய தலைமுறைக்குப் புதிய கருத்தூக்கம் ஏற்படுத்தலாம்.எனதருமை நாட்டுமக்களே, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மிச்சாமீ துக்கடம். மிக்க நன்றி.
குரல் மற்றும் தமிழாக்கம் : ராமஸ்வாமி சுதர்ஸன், சென்னை வானொலி



