புது தில்லி:
செப்.3 ஞாயிற்றுக் கிழமை நாளை மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் 9 பேருக்கு இடம் அளிக்கப்படவுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செப்.3 ஞாயிற்றுக் கிழமை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கு வசதியாக, அமைச்சர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
செப்.3 ஞாயிறு காலை 10.30 க்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில். உ.பி.,யைச் சேர்ந்த சிவபிரதாப் சுக்லா, சத்யபால் சிங், பீகாரைச் சேர்ந்த அஸ்வினி குமார் செளபே, ஆர்.கே .சிங், ம.பி.,யைச் சேர்ந்த வீரேந்திர குமார் , கர்நாடகாவைச் சேர்ந்த அனந்தகுமார் ஹெக்டே, ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், முன்னாள் ஐ.ஏ.எஸ் அல்போன்ஸ் கண்ணந்தனம் மற்றும் ஹர்தீப் சிங்பூரி உட்பட ஒன்பது பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
அருண் ஜேட்லிக்கு அதே நிதியமைச்சகமே ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. அண்மைக் கால ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து சுரேஷ் பிரபு ராஜினாமா செய்தார். அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அனேகமாக அவருக்கு சுற்றுச் சூழல் அமைச்சகப் பொறுப்பு வழங்கப்படலாம். நிதின் கட்கரி கேபினட் அந்தஸ்து பெறக் கூடும். ரவிசங்கர் பிரசாத், ஜேபி நட்டா ஆகியோரும் வேறு அமைச்சகங்களுக்கு மாறக் கூடும் என்று கூறப்படுகிறது.
மோடி சீனா செல்வதால், அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றத்தினை சரிப்படுத்திச் செல்ல திட்டமிட்டுள்ளார். புதிய அமைச்சர்களில் ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ்., ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக இருந்து பின்னர் அரசியலில் புகுந்த நபர்களே அதிகம்.



