புது தில்லி:
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளைப் பெற்ற போது, அவற்றை எண்ணுவதற்கு இயந்தரத்தைப் பயன்படுத்தவே இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2016 நவம்பர் 9ஆம் தேதி புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று அறிவித்தார் மோடி. இதன் பின்னர், வங்கிகளில் ரூ.2.89 லட்சம் கோடி மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணம் டெபாசிட் ஆனது. சுமார் 13.33 லட்சம் வங்கிக் கணக்குகளில் 9.72 லட்சம் பேரால் இந்தப் பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இதனை வருமானவரித்துறை தெரிவித்தது. இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், 99 சதவீத பழைய நோட்டுகளுக்கு பதிலாக, புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு புழக்கத்தில் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இத்தகைய சூழ்நிலையில், வங்கிகளுக்கு வந்த பணம் எவ்வாறு எண்ணப்பட்டது, இயந்திரம் பயன்படுத்தப் பட்டதா என்ற கேள்விகளைக் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கப்பட்டது. இதற்கு, வங்கிகளில் செலுத்தப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணுதவற்கு ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரத்தை பயன்படுத்தவில்லை என்று ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. வங்கிகளில் செலுத்தப்பட்ட மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு எத்தனை பேர் பணியாற்றினர் என்ற தகவலை அளிப்பதற்கு ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது.



