படிப்படியாக குறைகிறது ரூ.2000 நோட்டுப் புழக்கம்!

இந்தியா சற்றுமுன் வணிகம்
money 1

கடந்த 2019-20 நிதியாண்டில் புதிதாக 2,000 ரூபாய் நோட்டு அச்சிடப்படவில்லை எனவும், இந்த நோட்டின் புழக்கம் சில ஆண்டுகளில் குறைந்துவிடும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2018 மார்ச் இறுதியில் 33,632 லட்சம் ரூ.2,000 நோட்டு புழக்கத்தில் இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் 32,910 லட்சமாகவும், கடந்த மார்ச் மாதம் 27,398 லட்சமாகவும் குறைந்திருந்தது.

மொத்தமுள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் இது 2.4% மட்டுமே. இது கடந்த 2018 மார்ச் இறுதியில் 3.3 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் 3 சதவீதமாகவும் இருந்தது.

ரூபாய் மதிப்பு அடிப்படையில் கணக்கிட்டால் ஒட்டுமொத்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் ரூ.2,000 நோட்டு கடந்த மார்ச் இறுதியில் 22.6 சதவீதம்! இது கடந்த 2018 மார்ச்சில் 37.3 சதவீதமாகவும், கடந்த ஆண்டு மார்ச்சில் 31.2 சதவீதமாகவும் இருந்தது.

அதே நேரம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்குப் பின்னர், புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட ரூ.200, ரூ.500 நோட்டுகளின் புழக்கம், கடந்த 3 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று பரவலால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, கடந்த நிதியாண்டில் அதற்கு முந்தைய நிதியாண்டை விட ரூபாய் நோட்டு சப்ளை 23.3 சதவீதம் குறைந்து விட்டது. கடந்த நிதியாண்டில் புதிதாக 1,463 கோடி ரூ.500 நோட்டு அச்சிட ஆர்டர் வழங்கப்பட்டது. இதில் 1,200 கோடி நோட்டு வங்கிகளுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது. முந்தைய ஆண்டு 1,169 கோடி நோட்டு அச்சிட ஆர்டர் கொடுக்கப்பட்டு, 1,147 கோடி நோட்டு விநியோகிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2019-20 நிதியாண்டில், 205 கோடி ரூ.200 நோட்டு, 330 கோடி ரூ.100 நோட்டு, 240 கோடி ரூ.50 நோட்டு, 125 கோடி ரூ.20 நோட்டு, 147 கோடி ரூ.10 நோட்டு அச்சிட ஆர்டர் வழங்கப்பட்டது. இதில் பெரும்பகுதி நோட்டு வங்கிகளுக்கு புழக்கத்துக்காக விநியோகிக்கப்பட்டன.

ரூ.2,000 நோட்டு கருப்பு பண பதுக்கலுக்கு வழி வகுக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஏற்கெனவே வங்கி ஏடிஎம்களில் ரூ.2,000 நோட்டு நிரப்பப் படுவது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அச்சிடுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே சில ஆண்டுகளில் இவற்றின் புழக்கம் படிப்படியாகக் குறைந்து விடும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.