புது தில்லி: நாட்டில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க எதுவும் செய்வேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாட்டில் அண்மையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதல்கள் குறித்து அவர் மேலும் பேசுகையில், “சிறுபான்மையினரைக் காப்பாற்ற நான் எந்த ஒரு நிலைக்கும் செல்வேன். சிறுபான்மையினர் இடையே நிலவும் பாதுகாப்பின்மை உணர்வை முடிவுக்கு கொண்டு வரவும் எதையும் செய்வேன்,” என்று கூறினார். தில்லி, கர்நாடகம், மராட்டியம், அரியானா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. மேற்கு வங்காளத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மும்பை மற்றும் மத்திய பிரதேச மாநிலம் ஜலந்தரில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் கத்தோலிக்க பள்ளி மற்றும் கதீட்ரல் வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 6 பேரை கைது செய்து உள்ளோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
