புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட வேத விற்பன்னர்கள், முறைப்படி வேத கோஷம் முழங்க பூமி பூஜையை நடத்தி வைத்தார்கள்.
டிச.10 வியாழக்கிழமை இன்று காலை, பிரதமர் நரேந்திர மோடி 971 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான பூமி பூஜையை செய்தார்.
மோடி அரசின் லட்சிய திட்டங்களில் ஒன்றான சென்ட்ரல் விஸ்டா திட்டம், சென்ட்ரல் விஸ்டா அவென்யூ என அழைக்கப்படும் பகுதி, ராஷ்டிரபதி பவன் மற்றும் இந்தியா கேட் இடையேயான பகுதி ஆகியவை அடங்கிய தொகுப்பாக, மறுவடிவமைப்பைக் கொண்டிருந்தது.
இதற்கான பூமி பூஜை இன்று மேற்கொள்ளப் பட்டது. இந்த பூமி பூஜை நிகழ்வு இந்து ஆன்மிக பாரம்பரிய மரபுகளின்படி நிகழ்த்தப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினருக்குமான ஜனநாயகக் கோயிலான நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வின் போது, பல்வேறு மதத்தினரின் வழிபாடுகளும் நடத்த திட்டமிடப்பட்டது.
அதில் ஒன்றாக, சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ சாரதா பீடத்தின் வேத விற்பன்னர்கள் குழு பங்கேற்று, பல்வேறு பூஜைகளை நிகழ்த்தியது. பூமி பூஜைக்கான அஸ்திவாரம் போடும் நிகழ்வின் போது பிரார்த்தனை செய்ய பல்வேறு மதங்களின் ஆன்மிக குருமார்களும் கலந்து கொண்டு பிரார்த்தனைகளைச் செய்தனர்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷியிடம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான பூமி பூஜை விழா ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் மோடி பொறுப்பினை வழங்கினார். மேலும், இது அனைத்து மதத்தினரின் நம்பிக்கைக்கும் உரிய நாட்டின் ஜனநாயகக் கோயில் என்பதால், இந்த பூமி பூஜை விழாவின் போது அனைத்து மதத்தினரின் ஆன்மிக நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கும் வகையில் பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றும், எனவே அனைத்து மத ஆன்மிக குருமார்களையும் அழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி, பிரல்ஹாத் ஜோஷியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருந்தார்.
ALSO READ: புதிய நாடாளுமன்ற கட்டிடம்: வேத கோஷம் முழங்க… புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!
அதன்படி அமைச்சர் ஜோஷி, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகாஸ்வாமிகளிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, பூமி பூஜைக்காக வேத விற்பன்னர்கள் மற்றும் புரோஹிதர்கள் அடங்கிய குழுவை புதுதில்லிக்கு அனுப்புவதாக சுவாமிகள் உறுதியளித்தார்.
பூமி பூஜை விழாவை முன்னிட்டு பூஜைகள் செய்ய முன்னேற்பாடுகளைச் செய்ய ஆறு பேர் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை தலைநகரை அடைந்தது. ஆச்சார்ய டி வி சிவகுமார் சர்மாகாரு, கே.எஸ்.லட்சுமி நாராயண சோமயாஜி, கே.எஸ் கணேஷ் சோமயாஜி, நாகராஜ அடிகாரு, ராகவேந்திர பட், ரிஷ்யச்ருங்கா ஆகியோர் வியாழக்கிழமை இன்று ஹிந்து ஆன்மிக மரபுகளின்படி சடங்குகள் மற்றும் பூஜைகளை நடத்தி வைத்தனர்.
இந்த பூமி பூஜை விழாவின் போது சிருங்கேரி புரோஹிதர்கள், குரு பூஜை, கணபதி பூஜை, புண்யாஹவசனம், ஆதிகேஷ பூஜை, அனந்த பூஜை, வராஹ பூஜை, புவனேஸ்வரி பூஜை ஆகியவற்றைச் செய்வித்தனர்.
மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அஸ்திவாரத்தில் பிரதிஷ்டை செய்து வைப்பதற்காக, ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட சங்குஸ்தாபன வஸ்துவும் நவரத்னங்களும் ஸ்ரீ ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் சார்பில் அனுப்பி வைக்கப் பட்டிருந்தது.