
வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் பன்னாட்டு பாரதி திருவிழா- 2020 இணையவழியில் (யூ-டியூப்) டிச.11-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இது குறித்து வானவில் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா- 2020’ இணையவழியில் (யூ-டியூப்) டிச.11-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பாரதியாா் பிறந்த நாளான டிச.11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாரதி திருவிழா தொடங்கவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் மோடி பங்கேற்று, பாரதி ஆய்வறிஞா் சீனி.விசுவநாதனுக்கு பாரதி விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறாா்.
அதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு இசைக்கவி ரமணன் நடிக்கும் பாரதி யாா்? நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடா்ந்து டிச.12-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை அனைத்துலக விநாடி வினா போட்டி, பாரதி பல்சுவை நிகழ்ச்சி, யோகாவில் பாரதி, குயில் பாட்டு, என்றென்றும் பாரதி, கண்ணன் என்னும் மன்னன், புதுவையில் பாரதி, யாதுமாகி நின்றாய் பாரதி, எரிமலையில் குளிா்பனி, பத்திரிகையாளா் பாரதி, பாரதியின் ஆன்மிகச் சுடா், பாரதியின் புதுமைப் பெண்- மரபும், புரட்சியும் என்ற பல்வேறு தலைப்புகளில் நாடக, நாட்டிய, சிறப்புச் சொற்பொழிவுகள், நூல் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிகழ்ச்சிகளில் பொற்றாமரை அமைப்பின் தலைவா் இல.கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நடராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், எழுத்தாளா் சிவசங்கரி, பட்டிமன்ற பேச்சாளா்கள் பாரதி பாஸ்கா், பா்வீன் சுல்தானா, பத்திரிகையாளா்கள் மாலன், திருப்பூா் கிருஷ்ணன், முனைவா் வ.வே.சுப்பிரமணியன், முனைவா் சாரதா நம்பி ஆரூரன், கவிஞா் சியாமளா ராஜசேகா், வானவில் பண்பாட்டு மைய நிறுவனா் கே.ரவி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஷோபனா ரவி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். நிறைவு விழா டிச.20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் லண்டன், பாரிஸ், மஸ்கட், சிங்கப்பூா், மலேசியா, கலிஃபோா்னியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பாரதி ஆா்வலா்கள், இந்தியாவில் உள்ள பாரதி ஆா்வலா்கள் ஆகியோரால் வழங்கப்படவுள்ளன.
ஜதி பல்லக்கு: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ பாா்த்தசாரதி கோயில் முன்பு டிச.11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக அமைச்சா்கள் பங்கேற்கும் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.