
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
56. ஆசையே துன்பத்திற்கு காரணம்!
சுலோகம்:
த்யாயதோ விஷயான் பும்ச: சங்கஸ்தேஷுபஜாயதே |
சங்காத் சஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ பிஜாயதே ||
க்ரோதாத்பவதி சம்மோஹ: சம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: |
ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணஸ்யதி ||
-பகவத்கீதை (2- 62, 63)-
பொருள்:
போகங்களைப் பற்றி நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று ஆசையாக பரிணமிக்கிறது. ஆசை தீரா விட்டால் சினமாக வடிவெடுக்கிறது. கோபத்தால் மன குழப்பம். மனக் குழப்பத்தால் தன்னை மறத்தல், விவேகம் இழந்து செய்யக் கூடாதவற்றைச் செய்து அதன் பலனாக புத்தி நசிந்து வாழ்க்கையே அழிகிறது.
விளக்கம்:
நேர்மையோடு முன்னேறுவதற்கு அதிக காலம் பிடிக்கும். அதிக சிரமமும் ஏற்படும். ஆனால் மனிதன் அழிவு வழியில் செல்ல எத்தனை நேரம் தேவை? மனம் அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி நினைத்தாலே போதும்! படிப்படியாக அது எவ்வாறு பரவுகிறது? எந்த வடிவை எடுக்கிறது? இறுதியில் மனிதனை எப்படி அழிக்கிறது? என்பதை விவரிக்கும் மனோதத்துவ விஞ்ஞானத்திற்கு உதாரணம் இந்த இரு ஸ்லோகங்களும்.
எத்தகைய அறிவாளி ஆனாலும் உலகியல் சுகங்களின் மேல் ஆசை கொண்டவர்களின் வாழ்க்கை இறுதியில் அழிவதைப் பார்க்கிறோம். பதவி நாற்காலி மீது ஆர்வமும் தம் வாரிசுகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பேராசையும் உள்ள தலைவர்கள் எதற்கும் துணிகிறார்கள்.
குருட்டு மாடு ஆசையோடு போய் வயலில் விழுந்தாற்போல் கோரிக்கைகளின் பின்னால் ஓட வேண்டாம் என்று இந்த ஸ்லோகங்கள் இரண்டும் எச்சரிக்கின்றன.
சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் அச்சம், குரோதம், பேராசை முதலான கோரமான ஆவேச உணர்ச்சிகளுக்கு ஆளாகி அரக்கர் போல் நடந்து கொள்வர். கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். அடிக்கடி அப்படிப்பட்ட செய்திகள் காதில் விழுந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்களில் பச்சாதாபப்பட்டு பின்னர் வருந்துவது பள்ளத்தில் விழுந்த நீருக்கு அணை கட்டுவது போல் வீணாகும்.