கட்டுரை: கமலா முரளி
” தீயா வேலை செய்யணும் குமாரு….” என்று துள்ளலாக நண்பர்கள் பேசுவார்கள். “அய்யோ பத்திகிச்சு, பத்திகிச்சு …” என்று வம்பர்கள் பேசுவார்கள். ஆனால், தினம் தினம் தீயாக…. தீயோடு…. மன்றாடி போராடும் தீயணைப்பு வீரர்கள் பற்றி நாம் நினைப்பதுண்டா ?
தன் உயிரை பணயமாக வைத்து, வீரத்துடன் போராடும் தீயணைப்பு வீரர்கள், மிக விரைவாக பரவும் நெருப்பையே வெறுப்பேற்றும் பொறுப்பான அதிகாரிகள்.
”விபத்து ! தீ பற்றி எரிகிறது” என்றால், நமக்குத் தெரிந்தது தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தான். அருகில் இருப்பவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தாலும், தீயணைப்பு படை வாகனம் “கண கண”வென ஓசையுடன் வந்து, சீருடை அணிந்த வீரர்கள் சடசடவென பெரிய நீர்குழாய்களையும், ஏணிகளையும் இன்ன பிற உபகரணங்களையும் பயன்படுத்தி, விறுவிறுவென செயலில் இறங்கும் போது தான் எல்லோருக்கும் ஒரு நிம்மதி பிறக்கிறது.
தீயணைப்பு வீரர்கள் தங்கள் பணியைச் செவ்வெனே செய்ய, தீயணைப்புத்துறை எல்லா கருவிகளையும், வாகனங்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். தண்ணீர் வசதி, வேறு வகையான அணைப்பான்களையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.
வீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி, போலியாக ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலையில் ( போலி தீ விபத்து ) நடைமுறை பயிற்சி, மனப்பயிற்சி, தொடர் உடற்பயிற்சி என எப்போதும் களப்பணியாளர்களான தீயணைப்புவீரர்கள் மட்டுமல்லாமல், துறை சார்ந்த அனைவருமே தங்கள் பணிகளை கவனமாக செய்ய வேண்டும். தீ விபத்து நேர்ந்த இடத்திலும் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறாக தீயைக் கட்டுப்படுத்தி, உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றும் பணியை வீரர்கள் செம்மையாகச் செய்திட,கருவிகளும் காரணிகளும் உதவிட வேண்டும் என்றாலும், நெஞ்சுரத்துடன், உயிரைப் பணயம் வைத்து, தன்னுயிரை கருதாமல், பிறர் நலம் நாடும் தீயணைப்பு படை வீரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
நம் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று தீயணைப்பு படை தினம் அனுசரிக்கப்படுகிறது. 1944 ஆம் ஆண்டு, மும்பை துறைமுகத்தில் “எஸ்.எஸ்.ஸ்பொர்ட்கின்ஸ்” என்ற கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ( வெடி மருந்து இருந்த கப்பல் ) தீயணைப்பு படை வீரர்கள் 66 பேருடன் கப்பல் ஊழியர்கள் மற்றும் பிறருடன் 231 பேர் பலியானர்கள். தீயணைப்பு படைவீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஏப்ரல் 14 ஆம் நாள் இந்தியாவில் தேசிய தீயணைப்பு சேவை நாளாக அனுசரிக்கப்படுகிறது.
தீயணைப்பு பணியில் தன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கிறார்கள். ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து ஒரு வார காலம் ”தீயணைப்பு வாரம்” அனுசரிக்கப்படுகிறது. பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் புது சவால்கள் பற்றிய பயிற்சி என நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சர்வதேச அளவில் மே 4 அன்று தீயணைப்பு படைவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மேற்கு விக்டோரியாவில் பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படைவிரர்கள் ஐவர் கருகி இறந்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் வந்த கோரிக்கைகள் காரணமாக, தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக 1999 ஆம் ஆண்டு மே 4 நாள் முதன்முதலில் தீயணைப்பு படைவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் ஆண்டுதோறும் சர்வதேச தீயணைப்பு படைவீரர் தினமாக மே 4 அனுசரிக்கப்படுகிறது.
தீயணைப்பு படை வீரர்களுக்கு பல நலத்திட்டங்களை அரசு வழங்குகிறது. பணியில் உயிர்த்தியாகம் செய்யும் வீரர்களுக்கு உயரிய மரியாதை செய்வதோடு, அவர்கள் குடும்பத்தாருக்கு உடனடி உதவிகள், வாரிசுகளுக்கு உடனடிப் பணி போன்றவையும் வழங்கப்படுகிறது. பணியின் போது, விபத்தைச் சந்திக்கும் வீரர்களுக்கும் தேவையான உதவிகள் செய்யப் படுகின்றன.
ஆனாலும், பொதுமக்களாகிய நம் கடமை என்ன ?
ஏப்ரல் 14 அன்று தேசிய தீயணைப்பு சேவை தினத்தையும், மே 4 அன்று சர்வ தேச தீயணைப்பு படை வீரர் தினத்தையும் நினைவு கூர்ந்தால் போதுமா ?
காப்பாற்ற ஆளிருக்கிறதே என கவனக் குறைவாக இருக்கலாமா ?
தீ விபத்துகளே வரா வண்ணம் கண்ணும் கருத்துமாய் இருப்பதே நாம் தீயணைப்பு வீரர்களுக்கு தரும் ஒத்துழைப்பு !
நினைத்தாலே மனம் இருளடையுமே கும்பகோணம் பள்ளி தீ விபத்தை !
இந்த கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், கொரோனா வார்டிலேயே தீ விபத்து ஏற்பட்டு, கிட்டதட்ட 18 நோயாளிகள் இறந்து விட்டார்கள் !
கவனத்துடன், பொறுப்புடன் செயல்படவேண்டியது அனைவரின் கடமையாகும் !
தீ பாதுகாப்பு முறைகளை அனுசரிப்போம் !
தீயணைப்பு படை வீரர் தம் சேவையைப் போற்றுவோம் !
கட்டுரையாளர் திருமதி கமலா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். ஆசிரியராக கல்விப் பணியில் இருபத்தெட்டு ஆண்டுகள் பணிபுரிந்தவர்., கேந்த்ரிய வித்யாலயா அகில இந்திய சிறந்த ஆசிரியருக்கான பரிசு பெற்றவர். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆங்கில வழியில் பல சொற்பொழிவுகளும் பயிற்சி வகுப்புகளும் நடத்தியிருந்தாலும், தாய் மொழியாம் தமிழ் மொழியில் கதை, கவிதை மற்றும் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.