
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மருமகளுக்கு நெட்டிசன்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மருமகள் நிகாரிகாவின் கணவரும் கொரோனா பாதித்த மாமனார் துலேஸ்வர் தாஸின் மகனுமான சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்றதால் வீட்டில் இல்லை. அதனால் மருமகள் நிகாரிகா பொறுப்பை சுமந்தார்.
அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லை மருமகள் நிகாரிகா மட்டும்தான் இருந்தார். கொரோனா பாதித்த தன் 75 வயது மாமனாரை தன் முதுகில் சுமந்து இவர் அருகில் இருக்கும் ராஹா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து மருமகள் நிகாரிகாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
உள்ளூர் அதிகாரிகள் மாமனார் துலேஷ்வர் தாஸை மாவட்ட கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்புமாறு கூறினர், அதே வேளையில் மருமகள் நிகாரிகாவை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கினர். ஆனால் மாமனாரை தனியே மருத்துவமனையில் விட மருமகள் நிகாரிகாவுக்கு மனம் வரவில்லை.
பிற்பாடு டாக்டர் சங்கீதா தார் மற்றும் சுகாதாரப் பணியாளர் பின்ட்டு ஹீரா ஆகியோர் இருவருக்கும் முதற்கட்ட சிகிச்சைகளை அளித்து பிறகு 108 ஆம்புலன்ஸில் மாமனார், மருமகள் இருவரையும் கொரோனாவுக்கான அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.
தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட மருமகள் நிகாரிகாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
ஒரு மருமகள் தனக்கும் தொற்றும் என்ற பயமில்லாமலும் சுயநலமில்லாமலும் செயல்பட்டது பெரிய பாராட்டுகளை குவித்து வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் பயத்துடனும் நம்பிக்கை இல்லாமலும் விரக்தியில் இருக்கும் போது தன் மாமனாருக்காக தன் உடல்நலத்தையும் பாராமல் தன்னலத்தை துறந்து செயல்பட்ட மருமகளை அப்பகுதிவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.