
க்ஷேத்திர அபசாரம் நடக்கக்கூடாது!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
புராதன கோவில்களை மேம்படுத்துவது நல்லதுதான். பாராட்டி அங்கீகரிக்க வேண்டியதே. ஆனால் தலங்களின் பழமை, வரலாறு, புராண, இதிகாச முக்கியத்துவம், புனிதம் ஆகியவற்றை அழிக்காமல் அவற்றை பாதுகாக்க முயற்சி செய்யவேண்டும்.
பாரத தேசத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஹிந்துக்கள் அனைவருக்கும் முக்கியமான கோயில்கள் வடக்கிலும் தெற்கிலும் பல உள்ளன. அதிலும் காசி, அயோத்தி, மதுரா, பதரி, கேதார் போன்றவை பல யுகங்களாக மஹா க்ஷேத்திரங்களாக விளங்கி ஒவ்வொரு இந்துவுக்கும் ப்ராத: ஸ்மரணீயங்களாகவும், தரிசிக்க வேண்டிய தலங்களாகவும் உள்ளன. இவற்றில் முதல் மூன்று கோவில்களில் பல தாக்குதல்கள் நடந்தன. ஆனாலும் அவற்றின் அருகிலேயே சிறிய கோவில்களை கட்டிக் கொண்டோம்.
சர்தார் படேலின் விடாப்பிடியான முயற்சியால் சோமநாதர் கோவில் புனர்நிர்மாணம் நடந்தது. ஆனால் அரசியல் சூழ்நிலைகளால் மீதி உள்ள அழிவுகளை சரி செய்ய இயலாமல் உள்ளோம்.
எது எப்படி இருந்தாலும்… சென்ற ஆண்டு அயோத்தி ராமர் மந்திர் நிர்மாணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. காசி விஸ்வநாதர் கோவிலின் சுற்றுப் புறத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ‘விஸ்வநாதர் காரிடர்’ அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதுவும் மகிழ்ச்சி அளிப்பதே!
பிற மதங்களின் மீது சகிப்புத்தன்மை, கௌரவம் ஆகியவற்றை விடாமலே சனாதன தர்மத்தின் நம்பிக்கை நிலயங்களை பாதுகாக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஊழல் வாசனையற்ற சிரத்தையை வரலாறாகக் கொண்ட மத்திய, மாநிலத் தலைவர்கள் நிர்மலமான உள்ளத்தோடு முன்னெடுக்கும் இந்த மகா காரியம் வணக்கத்திற்கு உரியது.

ஆனால் இந்தச் செயல் குறித்து சில மாறுபட்ட கருத்துகள் வெளிவருகின்றன. காசியில், காரிடர் நிர்மாணத்திற்காக பல புராதன கோவில்களையும் விக்கிரகங்களையும் அகற்றுகிறார்கள் என்றும் அவற்றை சரிவர பாதுகாப்பது இல்லை என்றும் பலர் கூறிவருகின்றனர்.
காசி வெறும் கட்டடங்களாலான தலம் அல்ல. அதற்கு கணக்கற்ற கால இதிகாசப் பின்னணி உள்ளது. எந்த லிங்கம், எந்த விக்கிரகம் எந்த ஸ்தானத்தில் உள்ளன என்பதை புராணங்கள் வர்ணித்து உள்ளன. அவற்றை நீக்கினால் அந்த ஸ்தானங்களின் புராணப் பின்னணியை அறிந்து செய்யும் சாஸ்திர வழிமுறைகளும் தல யாத்திரைகளும் என்னவாகும்?
அமெரிக்கா கொலரோடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரொபசர் ஜான் டி மெல்வில் என்ற காஸ்மிக் எனர்ஜி ஆராய்ச்சியாளர், ஹிந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசார்ய பி பி சிங் இருவரும் இணைந்து ஆய்வுகள் நடத்தி வெளியிட்ட அறிவியல் உண்மைகளை இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்கவேண்டும்.
நமக்குச் சிறிய பிரதிமைகளாக, கூடு போன்ற கோவில்களாகத் தென்படுபவை ‘விஸ்வ சைதன்ய சக்திக் கேந்திரங்கள்’ (காஸ்மிக் எனர்ஜி பாயிண்ட்ஸ்) என்று ஆய்வில் கண்டறிந்தார்கள். அந்த இடங்களில் இருந்து அவற்றை அகற்றினால் அந்த சக்திக் கேந்திரத்தை பங்கம் செய்தாற்போலாகும்.
இது போன்ற புராணச் சிறப்பும் ஆற்றலும் நிரம்பிய க்ஷேத்திரங்களில் மாற்றங்களைச் செய்யும் போது இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு பங்கம் நேராமல் கவனமாக, திறமையோடு நிர்மாணம் மேற்கொள்ள வேண்டும்.
வீடு, கடைகளை இடிப்பது போல கோவில்களையும் விக்ரகங்களையும் அகற்றுவது க்ஷேத்திர அபசாரம்… தெய்வ அபசாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். வரலாற்றுச் சின்னங்கள் என்ற அளவிலாவது கௌரவம் அளிக்க வேண்டாமா?
இந்தப் புனரமைப்புகளில் சில துவாதச ஆதித்தியர் கோவில்கள், சில பஞ்ச விநாயகர்கள், சில சுயம்பு லிங்கங்கள் போன்றவை அகற்றப்பட்டு விட்டன என்றும் முக்தி மண்டபம் கூட அகற்றப் படுகிறது என்றும் ஒரு புராதனமான அக்ஷய வட வ்ருக்ஷம் கூட வெட்டப்பட்டது என்றும் பலர் மன வேதனை அடைந்துள்ளனர்.

காசியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 1193 இல் முகமது கோரி என்ற கொடூரன் தன் சேனாதிபதி குதுப்புதீனைக் கொண்டு விஸ்வநாதர் கோவிலை துவம்சம் செய்தான். அதன்பின் 400 ஆண்டுகள் ஆத்மவீரேஸ்வர சுயம்புலிங்கத்தையே அதற்கு பதிலாக பூஜித்து வந்தனர். அதன்பின் அக்பர் காலத்தில் ஆயிரத்து 1585ல் அவனுடைய நிதி அமைச்சர் தோடர்மால் ஹிந்துமத பெரியவர்களின் உதவியோடு விஸ்வநாதர் கோயிலை கட்டுவித்தான்.
மீண்டும் 1669 கொடூரன் அவுரங்கசீப் அதனை மிகக் கொடூரமாக இடித்துத் தள்ளினான். ஆனால் 108 ஆண்டுகளுக்கு பிறகு 1777ல் மகா பக்தை, சிவயோகினி, ப்ராத:ஸ்மரணீயரான அகல்யா பாயி ஹோல்கர் மற்றுமொரு விஸ்வநாதர் கோயிலை கட்டுவித்தார். அற்புதமான நர்மதா பாண லிங்கத்தை விஸ்வநாதராக பிரதிஷ்டை செய்வித்தார். துவம்சமான கோவிலிலிருந்து வெளிப்பட்ட சிவஜோதி பக்தியோடு பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்தில் பிரவேசித்து பூஜைகளை ஏற்று வருகிறது.
இதனை மேலும் பிரகாசிக்கும்படி செய்து அழகிய காரிடர் கட்டுவது என்பது நல்லதுதான். ஆனால் கோவிலுக்கு அழகு செய்வதற்காக பல புராதன கோவில்களையும் தெய்வ விக்கிரகங்களையும் புனிதமான விருட்சங்களையும் துவம்சம் செய்வது சரிதானா? இந்த க்ஷேத்திர அபச்சாரம், தெய்வ அபசாரம் பாரத தேசத்திற்கு தீங்கு விளைவிக்காதா?
ஆனால் தேசத்திற்காகவும் தர்மத்திற்காகவும் அயராது பாடுபடும் சத் புருஷர் முதலமைச்சராகவும் மற்றும் ஒரு நல்ல மனிதர் லோக்சபா அங்கத்தினராகவும் உள்ள உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசியில் இதுபோன்ற அபராதங்கள் நடக்காது என்றுதான் நம்ப வேண்டும். தல வரலாறு, புராண, இதிகாச பின்னணியை அறிந்த அறிஞர்கள் அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறவில்லையா? அல்லது அவர்களின் பார்வைக்கு வராமலே அதிகாரிகள் அலட்சியமாக, அறிஞர்களின் சொற்களை கேட்காமல் இந்த அழிவுகளைச் செய்கிறார்களா? என்பவை பதில் தெரிய வேண்டிய கேள்விகள்.
சிலர் துணிந்து அவுரங்கசீபோடு ஒப்பிட்டு இந்த சிறந்த தலைவர்கள் காசி கோயிலை துவம்சம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இவையனைத்தும் மனதுக்கு வருத்தம் அளிக்கின்றன.
அதுமட்டுமல்ல… தேசத்தையும் தர்மத்தையும் அழிக்க நினைக்கும் எதிர்க் கட்சிகளின் கும்பல் இதனை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு ஹிந்துக்களைப் பிரிக்கவும்கூட நினைக்கலாம்!அப்படிப்பட்ட தீய நிலைமைக்கு இடம் கொடுக்காமல் உடனடியாக பெருந்தலைவர்கள் முன்வந்து தெளிவு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் சிலரிடம் பேசியபோது… காரிடர் கட்டுமானத்தில் முக்கியமானவற்றை அகற்றவில்லை என்றும் சிலவற்றை அகற்றினாலும் அவற்றை தகுந்த விதத்தில் வேறோர் இடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் சுவரை அகற்றியபோது வட வ்ருக்ஷம் சரிந்து விட்டது என்றும் ஆனால் அதன் மூலமரத்தை மீண்டும் பாதுகாத்து வருவதாகவும் விவரமளித்தனர்.
இந்த இரண்டு விதமான மாறுபட்ட அபிப்பிராயங்களில் இரண்டாவது செய்தி உண்மையாக இருக்க வேண்டும் என்று நம்புவோம்! ஆனால் முதல் செய்தியைக்கூட கணக்கில் எடுத்துக் கொண்டு மக்கள் திருப்தி அடையும் விதமாக காரிடார் நிர்மாணம் நடைபெறவேண்டும். தேசம், தர்மம் இரண்டையும் பாதுகாப்பவர்கள் நிரந்தரமாக அரசாள வேண்டும்!
பவித்திரமான பிந்து மாதவ கோவிலைக் கூட அன்றைய துரோகிகளான அரசர்கள் துவம்சம் செய்து அங்கு மசூதி கட்டினர். அதன் அருகில் சிறிய கோயிலில் வேறொரு பிந்து மாதவ மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறோம். அந்த இடங்கள் கூட புனிதமான புண்ணிய க்ஷேத்திரங்களே! அவற்றையும் அதன் சுற்றுப்புறத்தையும் கூட நல்ல விதத்தில் பாதுகாக்க வேண்டும். முன்பிருந்த வைபவம் மீண்டெழ வேண்டும்.
முழு காசியிலும் இருக்கும் அழகான கோவில்களை தலைமுறை களாக பாதுகாத்து வழிபட்டு வருபவர்களின் மனம் வேதனை அடையா வண்ணம் பழமையையும் வரலாற்றையும் சிரத்தையையும் காப்பாற்றியபடியே நூதன வளர்ச்சிக்கான நிர்மாணங்கள் நடக்க வேண்டும்.
தர்ம கண்ணோட்டமும் மக்கள் நலனும் பிரதானமாகக் கொண்ட முதலமைச்சர், பிரதமர் இருவரின் பார்வைக்கும் சரியானபடி விஷயத்தைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அறிஞர்கள் மற்றும் தொண்டர்களுக்கு உள்ளது. தொடர்புடைய அதிகாரிகளை எச்சரித்து க்ஷேத்திர வரலாறும் புனிதமும் அறிந்த பண்டிதர்களின் சொற்களை மதித்து கோவில்களையும் சிலைகளையும் பாதுகாக்கும் விதமாக அரசாங்கம் நடந்து கொள்ள வேண்டும். மூர்க்கத்தனமாக அந்நியர்கள் ஆக்கிரமித்த இடங்களில் சிதிலம் அடைந்துள்ள பெரும் கோவில்களையும் புனரமைக்க வேண்டும்.
துர்கா குண்ட், லக்ஷ்மி குண்ட் போன்றவற்றை அழகாக வடிவமைத்த ஆட்சியாளர்களால் மிக விரைவில் அனைத்து கோயில்களோடும் தெய்வங்களோடும் சுற்றுப்புற சுகாதாரத்தோடும் விஸ்வநாத நகரம் மிகப் பிரகாசமாக ஒளிர வேண்டும் என்று காசி நகர தெய்வங்களையும் யோகியர்களையும் பிரார்த்திப்போம்! அவ்விதமாக தலைவர்களின் அறிவு தூண்டப்பட வேண்டும் என்று வேண்டுவோம்!
“காசீ விஸ்வநாதோ விஜயதே வராம்!”
(ஜூலை 2021 தலையங்கம் ‘ருஷிபீடம்’ மாத இதழ்)