spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணும் யோகி! எதிர்க்கும் விஎச்பி.,! காரணங்கள் என்ன!?

மக்கள்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த எண்ணும் யோகி! எதிர்க்கும் விஎச்பி.,! காரணங்கள் என்ன!?

- Advertisement -
yogi and cow pooja
yogi and cow pooja

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது தற்போது மிகவும் அவசியம் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார். அவரது கருத்துக்கு விளக்கம் கேட்டும், இது ஹிந்துக்களுக்கும் எதிரானது என்று விமர்சனம் செய்தும், விஸ்வ ஹிந்து பரிஷத் கடிதம் எழுதியிருக்கிறது.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், உத்தர பிரதேசத்தில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும். தேர்தலில் போட்டியிட முடியாது. அதே நேரத்தில் இரண்டுக்கு உட்பட்ட குழந்தை மட்டுமே உள்ளவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட உள்ளன.’ என, வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் ஒன்றை இயற்ற உத்தரப் பிரதேச மாநில அரசு முன்வந்துள்ளது. உத்தரபிரதேச மாநில சட்ட கமிஷன் அந்தச் சட்டத்துக்கான வரைவு மசோதாவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த மசோதா தொடர்பாக கருத்து கூற விரும்புகிறவர்கள் ஜூலை மாதம் 19ம் தேதிக்குள் கருத்து கூற வேண்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த மசோதா 2 குழந்தைகளுக்கு மேல் பெறுகின்றவர்களுக்கு அபராதம் என்ற வகையில் என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் 2 குழந்தைகள் மற்றும் அதற்கு குறைவாக தங்கள் குடும்பத்தை அமைத்துக் கொள்கிறவர்களுக்கு என்னென்ன ஊக்குவிப்புகள், மானியங்கள் வழங்கப்படும் என்றும் பட்டியலிடுகிறது.

உலக மக்கள் தொகை தினமான ஜூலை 11 ஆம் தேதி இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பின்பற்றப்பட உள்ள மக்கள்தொகைக் கொள்கையை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச வரைவு மசோதாவில் கூறப்படும் விவரங்கள்:

உத்தரப்பிரதேச மாநில சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு மசோதா, சட்டமாகும் எனில் …

  • 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு நலத்திட்ட பயன்கள் மறுக்கப்படும்.
  • 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தல்கள் அல்லது மாநில அரசு நடத்தும் தேர்தல்களில் போட்டியிட முடியாது.
  • 2 குழந்தைகளுக்கு மேல் எத்தனை குழந்தைகள் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கான ரேஷன் கார்டில் 4 பேருக்கு உரிய அளவு மட்டுமே ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும்.
  • 2க்கு மேலாக குழந்தைகளைப் பெற்றவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாது.
  • அவர்கள் ஏற்கெனவே அரசுப் பணிகளில் இருந்தால் அவர்களுக்கு உத்தியோக உயர்வு வழங்கப்பட மாட்டாது. அரசு மானிய பயன்கள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்காது.

இந்த வரைவு மசோதா சட்டமான பிறகு அந்தச் சட்டம் உத்தரப் பிரதேச மாநில அரழிதழில் வெளியிடப்படும்.

மக்கள்தொகை கட்டுப்பாட்டுச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட ஓராண்டு கழித்து இந்த சட்ட விவரங்கள் அமலுக்கு வரும் என்று வரைவு மசோதா கூறுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தம்பதியர் தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கை 2 அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு பல ஊக்குவிப்புகள் வழங்கப்படும்.

தாங்களாக முன்வந்து குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்கிறவர்களுக்கு 3 சதவீத அளவுக்கு கூடுதலாக தேசிய ஓய்வூதியத் திட்டத்துக்கான முதலாளிகள் பங்களிப்பு உயர்த்தப்படும்.

அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு 2 ஊதிய உயர்வுகள் அவர்கள் பணி காலம் முழுக்க அனுமதிக்கப்படும். அவர்கள் வீடு அல்லது அடுக்குமாடி வீடு அல்லது வீட்டுமனை ஆகியவற்றை வாங்கினாலோ வீடு கட்ட முற்பட்டாலோ அவர்களுக்கு மானியம் வழங்கப்படும்.

அவ்வாறு கட்டப்படும் வீட்டுக்கு வினியோகிக்கப்படும் தண்ணீர் மின்சாரம் ஆகியவற்றுக்கான கட்டணம் குறைவானதாக இருக்கும்.

வீட்டு வரி குறைக்கப்படும், வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும், கட்டி முடித்த வீட்டை வாங்க முன் வருவோருக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.

1 குழந்தைக்கு மேல் பெறாத தம்பதியருக்கு கூடுதல் பயனாக இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும். குழந்தையின் இருபதாவது வயது வரை இலவச காப்பீடு கிடைக்கும்.

ஒற்றைக் குழந்தைக்கு கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை அடிப்படையில் இடம் அனுமதிக்கப்படும். இது ஐஐடி, எய்ம்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

ஒரு குடும்பத்தில் தனி குழந்தையாக இருக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். அவர்கள் படிக்கும் காலத்திலும் மேல் கல்வி கற்பதற்கும் உதவித் தொகை வழங்கப்படும்!

வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்ற நிலையில் தாமாக முன்வந்து குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அவர்களுடைய முதல் குழந்தை, பையனாக இருந்தால் 80,000 ரூபாயும் பெண்ணாக இருந்தால் 1 லட்சம் ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படும்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இயற்கை மற்றும் பொருளாதார அடிப்படை ஆதாரங்கள் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளன. எனவே மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதும் மக்கள் தொகை வளர்ச்சியை ஒரு அளவில் நிலை நிறுத்துவதும் அவசியம்! இது அனைவருக்கும் சமச்சீரான வாழ்க்கை கிடைக்க உதவும்! அதனால்தான் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை வரைவு மசோதாவில் அறிவித்துள்ளதாக உத்தரபிரதேச சட்ட ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இந்த வரைவு மக்கள்தொகைக் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு மசோதாவுக்கு விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனது எதிர்ப்புகளை அவர் கடிதமாக, உத்தரப் பிரதேச மாநில சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதில், ஒரு குழந்தையே போதும் என கருத்தடை சிகிச்சை செய்து கொள்வோருக்கு அவர்கள் அரசு ஊழியராக இருந்தால் பல ஊக்குவிப்புகளும் மானியங்களும் வழங்கப் படும் என்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்புகளை விமர்சித்துள்ளார்.

மசோதாவில் கூறப்பட்டுள்ள சலுகைகள் ஊக்குவிப்புகள் காரணமாக உத்தரப் பிரதேச மக்கள்தொகை குறையும் பொழுது சமூகத்தில் பெரும் பாதிப்புகளை எதிர்பாராத வகையில் உருவாக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சலுகைகளை வழங்குவதன் காரணமாக சமூகத்தில் பணியாற்றுவதற்கான தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாகிவிடும். சீனாவில் இத்தகைய நிலை ஏற்பட்டதன் காரணமாக சீன அரசு தனது நிலையை மாற்றிக் கொண்டு இரண்டு குழந்தைக்கு மேல் சீன தம்பதியர் பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

ஒரே ஒரு குழந்தை உள்ள குடும்பங்களில் அந்தக் குழந்தை தனது தாய் தந்தையரை காப்பதோடு தாய் மற்றும் தந்தையின் பெற்றோர்களையும் காக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அத்தகைய சூழ்நிலையில் ஒரு குழந்தை இரண்டு பெற்றோர், பெற்றோரின் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது பெரும் சமூகச் சிக்கலை ஏற்படுத்தும்.

உத்தரப் பிரதேச அரசு வழங்கும் தண்டனை நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துமா என்பதை உறுதியாகக் கூற முடியாது.

2 குழந்தைகளுக்கு மேல் பெறுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள், ஒரு குழந்தை பெறுவோருக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புகள் மானியங்கள் ஆகியவை எதிர்பார்க்கும் பலனைத் தரும் என்று கூறமுடியாது. இந்தியா முழுக்க குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரம் தீவிரமாக நடக்கிறது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்த பிரச்சாரத்தின் நோக்கம்.

ஆனால் இந்த பிரசாரத்திற்கு பலன் எல்லா சமூகத்திலும் சமமாகக் கிடைப்பதில்லை! அசாம் மாநிலத்திலும் கேரள மாநிலத்திலும் முஸ்லிம் சமூகத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவு குறையவில்லை! ஆனால் இந்து சமூகத்தில் எதிர்பார்த்த அளவைவிட குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளது.

இந்துக்கள் கருத்தரிப்பு அளவு கேரளத்திலும் அசாமிலும் 2.1 ஆக உள்ளது இது மரணத்தை ஈடு செய்து சமநிலையைப பராமரிப்பதாக இல்லை. ஆனால் இந்துக்கள் குழந்தை பெறும் விகிதம் இழப்பை ஈடு செய்யத் தேவையான அளவைவிடக் குறைவாக உள்ளது! ஆனால் கேரளத்தில் முஸ்லிம்கள் குழந்தை பெறும் விகிதம் 2.33 ஆகவும் அசாமில் 3.16 ஆகவும் உள்ளது.

அசாமிலும் கேரளத்திலும் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வர மக்கள்தொகை கட்டுப்பாட்டு பிரசாரம் காரணமாக இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்பதும் முக்கியக் காரணம்.

ஒரு சமூகத்தின் எண்ணிக்கை குறைய ஒரு சமூகத்தின் எண்ணிக்கை உயர்வது சமூகத்தில் சமநிலையை பதம் பார்த்துவிடும். எனவே உத்தரப் பிரதேச அரசு தனது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு மசோதவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் கோரியுள்ளார்.


vaiko sarathpawar
vaiko sarathpawar

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டுமானால் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

உலக மக்கள்தொகை தினத்தை ஒட்டி வெளியிட்ட செய்தியில், நாட்டின் மொத்த வருமானத்தை உயர்த்தவும்,மக்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச அரசு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு மசோதாவை அறிமுகம் செய்துள்ள நிலையில், சரத் பவாரும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe