
இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தருவதாக கூறி, மூதாட்டியிடம் ‘ஆன்லைன்’ வழியாக 2.06 கோடி ரூபாயை ஏமாற்றிய கும்பலை சேர்ந்த மேலும் ஒருவரை, தில்லியில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, மந்தைவெளியை சேர்ந்தவர் சுதா ஸ்ரீதரன்; 2019ல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, மர்ம நபர்கள் மொபைல் போனில் இவரை தொடர்பு கொண்டனர்.
இறந்த உங்கள் கணவரின் இன்சூரன்ஸ் பணம் நிலுவையில் உள்ளது; அதை பெற்றுத் தருகிறோம் என நம்ப வைத்து, வெவ்வேறு வங்கி கணக்குகளில் 2.06 கோடி ரூபாய் வரை பெற்று ஏமாற்றினர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தில்லியை சேர்ந்த அமண்பிரசாத் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க, மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், தில்லி திலக் நகரில் பதுங்கியிருந்த சிம்ரன்ஜித் சர்மா, 29, என்பவரை 24ம் தேதி கைது செய்தனர்.
பின், தீஸ்ஹஜார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சென்னை அழைத்து வந்தனர். விசாரணையில், தில்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை பார்த்தபோது, மோசடி கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தமிழகம், கேரளாவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பின், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்



Leave a Reply