
இந்தியாவில் சமீபகாலமாக சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது.
இதில் ஒரு சிலர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மட்டுமல்லாமல் அதை, படமாக எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் காணொளிகளை எடுப்பது, பார்ப்பது, பகிர்வது என்கிற செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரவுகளை சேகரித்துள்ள சிபிஐ அதிகாரிகள் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 76 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அந்த வகையில் சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றுவது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் தமிழகத்திலும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பாலியல் காணொளிகளை காணுவது சமூகத்தில் பெரும்பாலானோர் விருப்பமாக உள்ளது. இதில் வக்கிர எண்ணம் கொண்டோர், மனப்பிறழ்வு காரணமாக குழந்தைகளின் பாலியல் காணொளிகளை காண விரும்புகின்றனர்.
குழந்தைகளை துன்புறுத்தி எடுக்கப்படும் பாலியல் காணொளிகள் உலகம் முழுவதும் பெரிய அளவிலான ஆன்லைன் பொருளீட்டும் வியாபார சந்தையாக உள்ளது.
குழந்தைகள் பாலியல் ஆபாசக் காணொளிகளை பார்ப்பது, தன்னுடைய செல்போனில், லேப்டாப்பில் சேமித்து வைப்பது, அதை ஷேர் செய்வது சட்டப்படி குற்றம். இந்தியாவிலும் இது தடை செய்யப்பட்டுள்ளது.
நாம் ரகசியமாகத்தானே செய்கிறோம் யார் பார்க்கப்போகிறார்கள் என்று பார்ப்பதோ, பரப்புவதோ, சேமிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்கு என்றே பிரத்யேக டூல்களை பல நாடுகள் உருவாக்கிவிட்டன.
இந்தியாவிலும் அப்படிப்பட்ட பிரத்யேக டூல்கள் மூலம் சம்பந்தப்பட்டவர் ஐபி அட்ரஸை சேகரித்து எளிதாக பிடிக்க முடியும்.
இவ்வாறு குழந்தைகளை பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவதை படமெடுத்து இணையதளத்தில் விற்று காசு பார்ப்பவர்கள் உள்ளனர். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் பதிவுகள் (CSAM) என இதை அழைப்பார்கள்,
இதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் நடக்கிறது. இது தவிர கொரோனா காலக்கட்டத்தில் வீட்டில் முடங்கிக்கிடந்த ஆண்களால் இதுபோன்ற தேடல்கள் அதிகரித்து அதுவே வக்கிர எண்ணமாக மாறி அதிக அளவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது.
இது 200% வரை அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இவ்வாறு செய்பவர்கள் அதை காணொளியாக ஆன்லைனில் பரப்புவதும் நடந்துள்ளது.
இதுபோன்ற குற்றச் செயல்களைத்தடுக்க 2019 ஆம் ஆண்டில், சிபிஐ அதன் சிறப்புக் குற்றப் பகுதியின் ஒரு பகுதியாக OCSAE எனும் ஆன்லைன் குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் தவறான நோக்கோடு பயன்படுத்துதல் தடுப்பு/விசாரணைப் பிரிவை அமைத்தது.
அதன் முக்கியப்பணி குழந்தைகள் பாலியல் வன்கொடுமையை தடுத்தல் மற்றும் அதை காணொளியாக எடுத்து பரப்புவதை தடுத்தல் மேற்கண்ட காரணத்துக்காக குழந்தைகளை கட்டாயப்படுத்தி பயன்படுத்துவதை தடுப்பது ஆகும்.
அவ்வாறு சேகரித்த தரவுகள் அடிப்படையில் ஆன்லைன் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் தவறான செயலுக்காக பயன்படுத்துதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் மொத்தம் 83 குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ நவம்பர் 14 அன்று 23 தனித்தனி வழக்குகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்த தரவுகளை நாடெங்கும் சேகரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் முதற்கட்டமாக நாடுமுழுவதும் நேற்று 76 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
இதில் தமிழகத்திலும் திருவள்ளூர், சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தில் சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.