
இந்தியா-நியூசிலாந்து முதல் டி20
ஜெய்ப்பூர் – இந்தியா வெற்றி
முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதனன்று நடைபெற்றது. இந்திய அணியில் கோலி, ஜதேஜா, பாண்டியா ஆகியோர் ஆடவில்லை. நியூசிலாந்து அணியில் கான்வே காயம் காரணமாக ஆடவில்லை; அணித்தலைவர் வில்லியம்சன் முழங்கை காயம் காரணமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்; நீஷம், சோதி, மில்னே ஆகியோரும் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக ஓய்வு எடுத்தனர்.
இருந்தாலும் இரண்டு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றை ஆடின. டரில் மிட்சல் நியூசிலாந்து அணியின் ஒரு மித-வேக பந்துவீச்சாளர். அவர் தொடக்க மட்டையாளராக ஆடினார். வெங்கடேஷ் ஐயர் ஒரு தொடக்க ஆட்டக்காரர்; மித-வேக பந்துவீச்சாளரும்கூட. ஆனால் அவர் தொடக்க வீரராக இறங்கவில்லை; பந்தும் வீசவில்லை.
ஆனால் ஒரு நகை முரணாக 20ஆவது ஓவரை வீச மிட்சல் அழைக்கப்பட்டார். தனது டி20 வாழ்க்கையின் முதல் பந்தைச் சந்திக்க வெங்கடேஷ் ஐயர் தயாராக இருந்தார். ஆறு பந்துகளில் 10 ரன் அடிக்க வேண்டிய நிலை. முதல் பந்து வைட். வெங்கடேஷ் ஐயர் சரியாக வீசப்பட்ட முதல் பந்தில் ஃபோர் அடித்தார்; இரண்டாவது பந்தில் அவுட்டானார். 10 ரன்னையும் அடித்திருந்தால் வெங்கடேஷ் பிரபலமடைந்திருப்பார். மிட்சலாவது பிரபலமடைந்தாரா என்றால், அதுவும் இல்லை.
மூன்றாவது பந்தில் இரண்டு வைட் போட்டார் மிட்சல். ஆகவே ஏழு ரன் எடுத்தாயிற்று. மீதம் மூன்று பந்துகளில் மூன்று ரன் தேவை. அதுவரை பெரிய ஷாட் எதுவும் அடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ரிஷப் பந்த் ஒரு ஃபோர் அடித்து இந்திய அணியன் டென்ஷனைத் தீர்த்தார். ஆக மிட்சலும் பிரபலமடையவில்லை.
என்ன ஒரு கேம்? மற்றபடி நியுசிலாந்து முதலில் ஆடி, இருபது ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது. கப்தில் 70 ரன், சாப்மென் 63 ரன், அஷ்வின் ஒரு ஓவரில் இரண்டு விக்கட் எடுத்தார். புவனேஷ்குமார் இரண்டு விக்கட் எடுத்தார். பதிலுக்கு இந்திய அணி 19.4 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 166.
ரோஹித் ஷர்மா 48 ரன், சூர்யகுமார் யாதவ் 62 ரன். முகம்மது சிராஜ் கடைசி ஓவர் வீசும்போது கையில் காயம் பட்டுக்கொண்டார். அதற்கு மேல் பந்து வீச மாட்டார் என நினைத்தபோது அவர் ஓவரை முழுவதுமாக வீசி ஒரு விக்கட்டையும் எடுத்தார்.
அடுத்த டி20 ஆட்டம் வெள்ளியன்று ராஞ்சியில் நடைபெறும். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.