வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் மற்றும் யுபிஐ பரிமாற்றம் செய்யும்போது கட்டணம் விதிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விளக்கம் அளித்துள்ளது
மும்பை ஐஐடி கல்வி நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில் ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட ஜன் தன் வங்கிக்கணக்கில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் பரிமாற்றக் கட்டணமாக ரூ.164 கோடியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வசூலித்தது தெரிவித்துள்ளது.
ஜன் தன் வங்கிக் கணக்கு தாரர்களிடம் கடந்த 2017 முதல் 2019-ம் ஆண்டுவரை 4 டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கு மேல் செய்தால், ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.17.70 கட்டணம் விதித்துள்ளது. இதன் மூலம் ரூ.254 கோடி ஈட்டியுள்ளது.
அதாவது ஜன் தன் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் முதலில் 4 டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு கட்டணம் இல்லை. ஆனால் அதன்பின் 15 ரூபாய்க்கு ஏதேனும் பொருள் வாங்கி டிஜிட்டல் பரிமாற்றத்தில் அல்லது யுபிஐ மூலம் பணம் செலுத்தினாலும் 5-வது பரிமாற்றத்திலிருந்து ஒவ்வொரு முறையும் ரூ.17.70 வசூலிக்கப்படும்.
2017ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு செப்டம்பர் வரை ரூ.254 கோடியை ஜன் தன் வங்கிக்கணக்கு தாரர்களிடம் கூடுதல் பரிமாற்றத்துக்காக ஸ்டேட் வங்கி வசூலித்துள்ளது.
இந்தப் பணத்தை திருப்பிதர மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை ரூ.90 கோடி மட்டுமே ஸ்டேட் வங்கி வங்கிக்கணக்கு தாரர்களிடம் திருப்பி அளித்துள்ளது. அதில் ரூ.164 கோடி திரும்ப வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்திக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
அடிப்படை சேமிப்புக் கணக்கு கணக்குதாரர்கள் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு அதாவது யுபிஐ, ரூபே டெபிட் கார்டு பரிமாற்றத்துக்கு எந்தவிதமான கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
அடிப்படை சேமிப்புக் கணக்கு கணக்குதாரர்கள் முதல் 4 பரிமாற்றத்துக்குப்பின் செய்யப்படும் பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்கும்முறை 2016-ம் ஆண்டு ஜூன் 15ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு 4 முறை பணத்தை எடுக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள். அவ்வாறு தேவைப்பட்டால் வங்கியில் எந்தவிதமான கட்டணமும் இன்று பணத்தை எடுக்கலாம்.
வாடிக்கையாளர்களிடம் 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குப்பின் பிடித்த கட்டணத்தை திருப்பித் தர மத்திய நேரடி வரிகள் வாரியம் 2020, ஆகஸ்ட் 30ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ரூ.90 கோடி திருப்பி கணக்குதாரர்களிடம் கணக்கில் செலுத்தப்பட்டது.
4 முறைக்குமேல் பணத்தை ஏடிஎம்களில் இருந்து எடுப்பதற்கு மட்டுமே வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், டிஜிட்டல் பரிமாற்றம், யுபிஐ பரிமாற்றத்துக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.