
இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் கான்பூர்
முதல்நால் ஆட்டம்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் விடாட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகியோர் ஆடவில்லை. கே.எல். இராகுல் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார்.
ரஹானே அணித்தலைவர், புஜாரா அணியின் துணைத்தலைவர்; அஷ்வின், ஜதேஜா இருவரும் சுழல்பந்து வீச்சாளராகத் தேர்வாகி விட்டார்கள்; மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் என முடிவானதால் அக்சர் படேல் அணிக்குள் வந்துவிட்டார்.
வேகப்பந்து வீச்சாளர்களாக இஷந்தும் உமேஷும் தேர்வாகினர். மீதமுள்ள நாங்கு வீரர்களில் இருவர் தொடக்க ஆட்டக்காரர்கள்; மயங்க் அகர்வாலும், ஷுப்மன் கில்லும் தேர்வாகினர். விக்கட் கீப்பர் விருத்திமான் சாஹா. ஆகவே பதினோராவது ஆட்டக்காரர், ஒரு பேட்டராக இருக்கவேண்டும். அது சூர்யகுமார் யாதவ்வா, ஷ்ரேயாஸ் ஐயரா என்பதில் ஷ்ரேயாஸ் என முடிவானது. அவர் இன்று முதல் முறையாக விளையாடுகிறார்.
பூவாதலையா வென்று இந்திய அணி மட்டையாடத் தீர்மானித்தது. டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 90 ஓவர் விளையாட வேண்டும். குறைந்த பட்சம் பேட்டிங் செய்யும் அணி 275 ரன் எடுக்க வேண்டும். எடுத்தால் அவர்கள் நன்றாக விளையாடியிருக்கிறார்கள் எனக் கொள்ளலாம். இந்திய அணி 84 ஓவர் விளையாடி நாலு விக்கட் இழப்பிற்கு 258 ரன் எடுத்திருக்கிறார்கள். இது அவர்கள் நன்றாக விளையாடியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
மாயங்க் அகர்வால் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 13 ரன் எடுத்தார். ஷுப்மன் கில் 30 ஓவர்கள் ஆடினார். அவர் 93 பந்துகளைச் சந்தித்து 52 ரன்கள் எடுத்தார். புஜாரா 30 ஓவர்கள் விளையாடி 26 ரன் எடுத்தார். ரஹானே 19 ஓவர்கள் விளையாடி 35 ரன் எடுத்தார். 38ஆவது ஓவரில் விளையாட வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 50 ஓவரில் விளையாட வந்த ரவீந்தர் ஜதேஜாவும் ஆட்டமிழக்காமல் ஆடிவருகின்றனர்.
இன்று ஆட்டநேர இறுதியில் ஷ்ரேயாஸ் 75 ரன்னுடனும் ஜதேஜா 50 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கட்டுக்கு இதுவரை 113 ரன் சேர்த்துள்ளனர். நியூசிலாந்து அணியின் ஜமீசன் மூன்று விக்கட்டுகள் எடுத்துள்ளார்.
நாளை இரண்டாம் நாள் ஆட்டம்.