
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், போலீசாருக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் திமுக அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன…
திருச்சி பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆடு திருடிய சிறுவர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்த பயங்கரம் நிகழ்ந்த மறுநாளே அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் தங்களது சொகுசு காருக்கு வழி விடவில்லை என்ற காரணம் கூறி மதுரை அருகே திமுகவினரால் வெட்டப்பட்டார்…
இத்தகைய அதிர்ச்சிகரமான சம்பவங்கள் திமுக அரசு மீது பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது. இந்நிலையில், இளைஞர்கள் சிலர் போலீஸாரின் வாகன சோதனையின்போது தாம்பரத்தில் பட்டாக்கத்தியுடன் பிடிபட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் அதிர்ச்சி வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாரின் கரங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் முந்தைய அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்டது போல் போலீசாருக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்…
அவரது டிவிட்டர் பதிவு:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, திமுக-வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல், போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளன, அந்த வரிசையில் நேற்று தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது,
ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு. காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை விடியா அரசு நிலைநாட்ட வேண்டும். என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.