பற்றி எரியும் மாநிலங்கள்; பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம்!

Published:

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் இன்று திரைக்கு வந்த பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நான்கு மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது.

ராஜஸ்தானில் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாறை ’பத்மாவத்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ள இந்தப் படத்தில் ராணி பத்மினியாக நடிகை தீபிகா படுகோனே, அவரது கணவராக ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ரன்வீர் சிங், அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரலாற்றின் படி, ராணி பத்மினி, அலாவுதீன் கில்ஜியை கலங்கடித்தவர். ஆனால், இந்தப் படத்தில் சித்தூர் ராணி பத்மினிக்கும், முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையேயான தொடர்பை தவறான முறையில் சித்திரித்துள்ளனர். இதனால், வட மாநிலங்களில் வாழும் ராஜபுத்திர இன மக்கள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. ராணி பத்மினியை தங்கள் இனத்தின் அடையாளமாகக் கருதும் ராஜபுத்திர இனத்தவர்கள், ‘பத்மாவத்’ படத்தின் திரிபுக் கற்பனையை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். கர்னி சேனா அமைப்பினர் வட மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

தணிக்கை துறையிடம் கொடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து, பத்மாவத் படத்தில் உள்ள 27 காட்சிகளை நீக்கிவிட்டு அந்தப் படத்தை வெளியிடலாம் என்று தணிக்கைத் துறை அனுமதித்தது. இதை எதிர்த்து ராஜபுத்திரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனிடையே பத்மாவத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என குஜராத், ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் அறிவித்தன. ஆனால் உச்ச நீதிமன்றமோ, பத்மாவத் படத்துக்கு தடை இல்லை. அந்தப் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும்; பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனால் இன்று ராஜபுத்திரர்கள் எதிர்ப்பை மீறி பத்மாவத் படத்தை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பிரச்னையினால் வட மாநிலங்களில் கடந்த இரு தினங்களாக ராஜபுத்திர இனத்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். குஜராத், ராஜஸ்தான், அரியானா உள்பட சில மாநிலங்களில் கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சுமார் 200 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. ராஜஸ்தானில் பல இடங்களில் சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அரியானா குர்காவ்னில் அரசுப் பேருந்துகளுக்கு தீ வைக்கப் பட்டன.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இதனிடையே பல முக்கியச் சாலைகளில் இன்று காலை மறியல்கள் நடத்தப்பட்டன. மதுராவில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டங்களில் ஈடுபட்ட கர்னி சேனா அமைப்பினர் முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப் பட்டதால், பாதுகாப்பு கருதி பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம் என்று இந்திய மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. இதனால் பெரும்பாலான திரையரங்குகளில் படம் இன்று திட்டமிட்டப்படி வெளியாக வில்லை. வடமாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் படம் வெளியாகவில்லை. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களில் பத்மாவத் எந்த ஒரு திரையரங்கிலும் திரையிடப் படவில்லை.

மீதமுள்ள வட மாநிலங்களில் பத்மாவத் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தென் மாநிலங்களான தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவில் படம் பிரச்னையின்றி வெளியானது.

இந்நிலையில் பத்மாவத் படத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ராஜபுத்திர இனத்தினர் நடத்தும் போராட்டம் வடமாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img