வசூலில் புதிய சாதனை படைத்த ‘பத்மாவத்’

பல்வேறு தடைகளை மீறி வெளியான பத்மாவத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 3 நாளில் ரூ.80.50 கோடியைத் தொட்டுள்ளது புதிய சாதனையாகப் பார்க்கப் படுகிறது.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்து உருவாகியுள்ள படம் பத்மாவத். இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வாழ்க்கையை தவறாக சித்திரித்திருப்பதாகக் கூறி, ராஜபுத் இனத்தைச் சேர்ந்த கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராஜ்புத் இனத்தவர்களின் போராட்டம் காரணமாக ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இப்படம் திரையிடப் பட தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை நீக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகி, உச்ச நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை அடுத்து குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்தது. ஆனால், வடமாநிலங்களில் நிலவும் பதற்றம் காரணமாக, இப்படம் திரையிடப் படுவதில் தடை ஏற்பட்டது. தென்மாநிலங்களில் வழக்கமான எதிர்பார்ப்புடன் வெளியானது. தமிழகம் முழுவதும் 150க்கும் அதிகமான திரையரங்குகளில், நீக்கப்பட்ட காட்சிகளுடன், பத்மாவத் திரையிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி வருவதுடன், படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.80.50 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்துள்ளது. முதல் நாளில் ரூ.19 கோடி வசூல் படைத்த பத்மாவத் 2வது நாளில் ரூ.27.50 கோடி வசூல் படைத்தது. விடுமுறை நாளான ஞாயிறு இப்படம் ரூ.50 கோடி வசூல் படைத்துள்ளது.