ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீர் பகுதியில் நேற்றிரவு ராணுவ ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் பலியாயினர். இந்திய ராணுவத்தில் தரைப் படை, விமானப் படை மற்றும் கப்பல் படைக்கு கடந்த 2000-ம் ஆண்டு முதல் துருவ் என்று அழைக்கப்படும் இலகு ரக அதிநவீன ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்திய ராணுவத்தில் 130 துருவ் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், வடக்கு காஷ்மீரில் பந்திப்பூர் பகுதியில் நேற்று மாலை ரோந்துப் பணிக்காக விமானிகள் இருவருடன் துருவ் ஹெலிகாப்டர் கிளம்பியது. இரவு 7 மணி அளவில் மானஸ்பால் பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு அந்த ஹெலிகாப்டர் சென்று சேரவேண்டும். ஆனால், அது குர்ஷு காட்டுப் பகுதியில் சபாபோரா மலை உச்சியில் இரவு 7.45 மணி அளவில் மோதி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான லெப்டினன்ட் கலோனல் மற்றும் மேஜர் ஜெனரல் உடல்களை இன்று காலை மீட்டனர்.
Popular Categories



