ஐ.பி.எல் 2022, மே 15 – இரண்டு ஆட்டங்கள்
– K. V. பாலசுப்பிரமணியன் –
ஐபிஎல்லில் 62ஆவது மற்றும் 63ஆவது ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் ஆட்டம் சென்னை, குஜராத் அணிகளுக்கிடையே மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கிடையே மும்பை ப்ர்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
சென்னை vs குஜராத்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை (133/5, கெய்க்வாட் 53, ஜெகதீசன் 39*, ஷமி 2-19) குஜராத் டைட்டன்ஸ் அணி (137/3, (சாஹா 67*, பத்திரனா 2-24) 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில், குஜராத் அணி சமநிலை இல்லாத அனுபவமற்ற அணி என்று கருதப்பட்டது.
அவர்களின் ஆரம்ப வெற்றிகள் ஆரம்பகால அதிர்ஷ்டம் அல்லது குருட்டு அதிர்ஷ்டம் என சொல்லப்பட்டது. ஆனால் ஐபிஎல் 2022இன் லீக் கட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் பத்தாவது வெற்றியுடன், முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் முதல் அணி ஆனது. சென்றமுறை அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு விளையாடியபோது, டைட்டன்ஸ் அணிக்கு டேவிட் மில்லர் மற்றும் ரஷித் கானின் அதிரடி ஆட்டம் தேவைப்பட்டது.
இந்த முறை, டைட்டன்ஸ் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், என முழு ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. டைட்டன்ஸ் மாற்றமில்லாத அணியுடனும், அதே சமயம் சூப்பர் கிங்ஸ் சில புதிய முகங்களுடனும் ஆட்டத்தில் இறங்கியது. சென்னை அணி வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தனர், ஆனால் 133 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
டாஸில் வென்ற தோனி, “சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்யும், இல்லாவிடில் அவர்கள் கடும் வெயிலில் பீல்டிங் செய்ய வேண்டியிருக்கும்” என்றார். ருதுராஜ் கெய்க்வாட் 49 பந்துகளில், 53 ரன்கள் எடுத்தார். 16ஆவது ஓவரில் அவர் அவுட் ஆனபோது, அவர் சோர்வாக காணப்பட்டார், மேலும் மொயீன் அலி மற்றும் என் ஜெகதீசன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, அவர் பெரும்பாலும் ஒற்றை ரன்னாக எடுத்துக்கொண்டிருந்தார்.
கான்வே விரைவாக ஆட்டமிழக்க, மொயீன் நம்பர் 3 இல் வந்து ரஷித் கானை ஆறாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்களுக்கு அடித்தார், ஆனால் ஒன்பதாவது ஓவரில் 17 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து, இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர் சாய் கிஷோரின் பந்தில் வீழ்ந்தார். முகமது ஷமி தனது நான்கு ஓவர்களில் 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
சென்னை அணி கடைசி ஐந்து ஓவர்களில் எந்த ஒரு பவுண்டரியும் அடிக்கவில்லை; வெறும் 24 ரன்களை மட்டுமே எடுத்தார்கள். ரஷித் தனது கடைசி மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார், ஷமி இரண்டாவது விக்கெட்டைக் கைப்பற்றினார், மேலும் யஷ் தயாள் 15 ரன்களுக்குப் பிறகு சிறப்பாகப் பந்துவீசினார்.
சென்னை அணிக்கு விரைவாக முதல் விக்கெட் தேவைப்பட்டது. ஆனால் குஜராத் அணியின் முதல் விக்கட், எட்டாவது ஓவர், முதல் பந்தில் விழுந்தது. ஆட்டமிழந்தவர், ஷுப்மன் கில்; எடுத்தது 18 ரன்; அப்போது ஸ்கோர் 59. அதன் பின்னர், சஹா இன்னிங்ஸின் முதல் சிக்ஸருக்கு சிமர்ஜீத் சிங் பந்தை அடித்தார். ஐபிஎல்லில் அறிமுக வீரர் மதீஷா பத்திரனாவின் முதல் பந்தில் கில் 18 ரன்களில் வீழ்ந்தார். பத்திரனா, லசித் மலிங்காவின் அச்சில் ஒரு ஸ்லிங் ஆக்ஷன் கொண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர்.
கடைசி வரை ஆட்டமிழக்கமல் இருந்த சஹா சீசனின் மூன்றாவது அரைசதத்தை அடித்தார். பின்னர் இறுதி ஓவரின் முதல் பந்தில் வெற்றி ரன்களை அடித்தார்.
ராஜஸ்தான் vs லக்னோ
ராஜஸ்தான் அணி (178/6, ஜெய்ஸ்வால் 41, படிக்கல் 39, சாம்சன் 32, ரவி பிஷ்னோய் 2/31) லக்னோ அணியை (154/6, தீபக் ஹூடா 59, ஸ்டோயினிஸ் 27, க்ருணால் பாண்ட்யா 25, போல்ட், பிரசித், மெகாய் தலா 2 விக்கட்டுகள்) 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது.
அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர், ஜாஸ் பட்லர் மூன்றாவது ஓவரில் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர், யசஷ்வீ ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தேவதத் படிக்கல் ஆகியோருடன் இணைந்து அணியின் ஸ்கோரை 101 ரன் வரை உயர்த்திய பின்னர் 11.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ரியன் பராக் (19 ரன்), ஜேம்ஸ் நீஷம் (14 ரன்), அஷ்வின் (ஆட்டமிழக்காமல் 10 ரன்) போல்ட் (ஆட்டமிழக்காமல் 17 ரன்) நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 178 ரன் என உயர்த்தினர். அடுத்து ஆடவந்த லக்னோ அணி மிக மிக மெதுவாக ரன் சேர்த்தது. மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கட்டுகள் வீழ்ந்தன. அப்போது அணியின் ஸ்கோர் 21/2.
பவர்ப்ளே முடிவில் அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 34 ரன் எடுத்திருந்தது. 10 ஆவது ஓவர் முடிவில் அணி 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தீபக் ஹூடா மட்டுமே நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். அவரும் 16ஆவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் இரண்டு விக்கட்டுகள் விழுந்தன.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வென்றது. ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்து வீசினார்கள்; குறிப்பாக போல்டும் அஷ்வினும் நன்றாக பந்து வீசினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ் தான் அணி 16 புள்ளிகளுடன் சிறந்த ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும், லக்னோ அணி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.