புது தில்லி: பொருளாதார மேதை அமர்த்தியா சென் பெயரிலான விருதினைத் தொடர மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நாளந்தா பல்கலைக் கழக வேந்தர் பதவியில் நீட்டிப்பு கேட்டு அமர்த்தியா சென் பெயரை முன்மொழிந்து பல்கலைக்கழக நிர்வாகம் அனுப்பியிருந்த விண்ணப்பத்தை மத்திய அரசு பரிசீலிப்பதில் தாமதம் காட்டி வருவதாகவும், அதனால் தான் பதவியில் நீடிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதாக தாம் உணர்வதால், தாம் வேந்தர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் அமர்த்தியா சென் கடிதம் அனுப்பியிருந்தார். பிரதமர் மோடி குறித்து அதிகம் விமர்சித்தது இதன் காரணமாக இருக்கும் என்று பேசப்பட்ட நிலையில், இதனை மத்திய அரசு மறுத்தது. இருப்பினும், அமர்த்தியா சென் பெயரிலான விருது தொடர்ந்து வழங்கப்பட அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமூக அறிவியல் ஆய்வில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் 2013ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த விருதுக்காக இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் எவருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. தற்போது அமர்தியா சென் விருது பெறுபவர்களுக்கான பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் இந்தத் தேர்வு முடிந்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் அறிவித்துள்ளது.
Popular Categories