
தெலங்கானாவில் தாசில்தாரை தீவைத்து எரித்தபோது, 65℅ தீவிர காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் இன்று மதியம் 3.20 க்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லா கபூர் பத்திரப் பதிவு அலுவலக, தாசில்தாரராக பணியாற்றி வந்தவர் விஜயா.
விவசாயி சுரேஷ் என்பவர் தனது நிலப் பிரச்னையை தீர்க்கக் கோரி பல முறை முறையிட்டும் தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுரேஷ், கடந்த 4 ஆம் தேதி தாசில்தார் விஜயாவை அலுவலகத்தில் வைத்து சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆத்திரம் அடங்காமல், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய தாசில்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தின்போது தாசில்தாரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவர் குருநாதம், எழுத்தர் சந்திரையா ஆகியோரும் தீக்காயமடைந்தனர். இதில் கார் டிரைவர் குருநாதம் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு முன் உயிடிழந்தார்.
இந்நிலையில் தாசில்தார் மீது தீவைத்த சுரேஷும் 65 % தீக்காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எழுத்தர் சந்திரையாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

முன்னதாக, சுரேஷ், பெண் தாசில்தார் விஜயாரெட்டியை தீவைத்து எரித்த காட்சிகளும், அதன் பின்னர் சுரேஷ் சாவகாசமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகின.

இதனிடையே, என் கணவரை பகடையாக சிலர் பயன்படுத்தியுள்ளனர் என்று சுரேஷின் மனைவி தெரிவித்துள்ளார்.



