
ஜகத்சிங்பூர்: ஒடிசாவில், விபத்தில் அடிபட்ட நபரை ஆம்புலன்சில் ஏற்றி சென்ற ஓட்டுனர், வாகனத்தை நிறுத்தி மது அருந்தியது மட்டுமின்றி, நோயாளிக்கும் ஊற்றிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில், சாலை விபத்தில் காயம் அடைந்த நபரை ஏற்றிக் கொண்டு, ஜகத்சிங்பூரின், திர்தால் என்ற பகுதியில் உள்ள நெடுஞ்சாலை வழியாக தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. வழியில் மதுக்கடை அருகே ஆம்புலன்ஸ் நின்றது.
அதில் இருந்து இறங்கி வந்த ஓட்டுனர் மது வாங்கி சென்றார். ஆம்புலன்சில் ஏறியதும் பாட்டிலை திறந்து மது அருந்தினார். காலில் காயத்துடன் கட்டுப்போட்டு படுத்திருந்த நபருக்கு ஒரு, ‘பெக்’ ஊற்றிக் கொடுத்தார். இந்த காட்சியை சுற்றி இருந்தவர்கள்,’மொபைல் போனில்’ படம் பிடித்தனர். இது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
ஆம்புலன்சில் காயம் அடைந்த நபருடன், ஒரு பெண்ணும், குழந்தையும் இருந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை பொது மக்கள் கண்டித்தபோது, நோயாளி தான் மது கேட்டதாக அவர் தெரிவித்தார்.
”இது தனியார் ஆம்புலன்ஸ் என்பதால், மண்டல போக்குவரத்து அதிகாரியும், போலீசாரும் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, ஜகத்சிங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஒதுங்கிக் கொண்டார்.
”இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. வழக்கு பதிவு செய்யாமல் விசாரிக்க முடியாது,” என, போலீசாரும் நழுவினர்.