October 13, 2024, 9:47 PM
29 C
Chennai

குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை!

74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

– தமிழில் முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்

வணக்கம்.

74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை நமது பயணம் ஆச்சரியமானது மற்றும் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவின் பெருமைக் கதையைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். குடியரசு தினத்தை கொண்டாடும் போது, ​​நாம் சாதித்ததை ஒரு தேசமாக, ஒன்றாக நாம் கொண்டாடுகிறோம்.

உலகில் வாழும் பழமையான நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று. இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது. இன்னும், நமது நவீன குடியரசு இளமையாக உள்ளது. சுதந்திரம் பெற்ற ஆரம்ப ஆண்டுகளில், எண்ணற்ற சவால்களையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது. தீவிர வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவை நீண்ட அந்நிய ஆட்சியின் பல மோசமான விளைவுகளில் இரண்டாகும். ஆனாலும், இந்தியா உறுதி குலையாமல் நம்பிக்கையுடன் இருந்தது. நம்பிக்கையோடு மனிதகுல வரலாற்றில் தனித்துவமான ஒரு பரிசோதனையை நாம் தொடங்கினோம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பலதரப்பட்ட மக்கள் – ஜனநாயகத்தின் வடிவத்தில் தொடக்கத்தில் இருக்கவில்லை. நாம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற நம்பிக்கையில் இதனை நாம் செய்தோம். எத்தனையோ மதங்கள், பல மொழிகள் நம்மைப் பிரிக்கவில்லை, ஆனால் நம்மை ஒன்றுபடுத்தின. அதனால்தான் நாம் ஜனநாயகக் குடியரசாக வெற்றி பெற்றுள்ளோம். இதுதான் இந்தியாவின் தத்துவம்.

இந்தத் தத்துவம் அரசியலமைப்பின் மையத்தில் உள்ளது மற்றும் காலத்தின் சோதனைகளைத் தாங்கி நிற்கிறது. சுதந்திரப் போராட்டத்தின் இலட்சியங்களின்படி, நமது குடியரசின் அடித்தளத்தை வழங்குவதற்காக அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், தேசிய இயக்கம் சுதந்திரத்தை அடைவதையும் இந்திய இலட்சியங்களை மீண்டும் நிலைநாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது. அந்தப் பல தசாப்த கால போராட்டமும் தியாகமும், அந்நிய ஆட்சியிலிருந்து மட்டுமல்ல, திணிக்கப்பட்ட விழுமியங்களிலிருந்தும் குறுகிய உலகக் கண்ணோட்டத்திலிருந்தும் விடுதலை பெற உதவியது. புரட்சியாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் தொலைநோக்கு மற்றும் இலட்சியப் பிரமுகர்களுடன் இணைந்து அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் ஆகிய நமது பழமையான மதிப்புகளை மீண்டும் தழுவினர்.
“ஆ நோ பத்ராஹ் க்ரதவோ யந்து விஷ்வதா”
என்ற வேதக் கட்டளையின்படி அதாவது அனைத்து திசைகளிலிருந்தும் நல்ல எண்ணங்களை நாம் பெற வேண்டும் என்ற வேதக் கட்டளையின்படி, இயற்கையோடி இயைந்த கருத்துக்களை நாம் வரவேற்றோம். மிக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் நமது அரசியலமைப்பு கட்டமைக்கப்பட்டது.

எங்களுடைய இந்த அடிப்படை ஆவணம் உலகின் பழமையான நாகரீகத்தின் மனிதநேய தத்துவம் மற்றும் நவீன யோசனைகளால் ஈர்க்கப்பட்டது. வரைவுக் குழுவுக்குத் தலைமை தாங்கி, அரசியலமைப்புச் சட்டத்தை இறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றிய பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு நம் நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும். இந்நாளில் நீதியரசர் ஸ்ரீ பி.என். ராவ் மற்றும் அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் உதவிய மற்ற நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளையும் நினைவுகூர வேண்டும். அந்த அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சமூகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். சட்டமன்றத்தில் 15 பெண் உறுப்பினர்களும் அரசியலமைப்பை உருவாக்குவதில் பங்களித்தனர்.

அரசியலமைப்பில் பொதிந்துள்ள இலட்சியங்கள் நமது குடியரசிற்கு தொடர்ந்து வழி காட்டியுள்ளன. இந்த காலகட்டத்தில், இந்தியா ஒரு ஏழை மற்றும் கல்வியறிவற்ற தேசமாக இருந்து உலக அரங்கில் நம்பிக்கையுள்ள தேசமாக மாறியது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் கூட்டு ஞானத்தின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்த முன்னேற்றம் சாத்தியமில்லை.

பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பிற ஆளுமைகள் எங்களுக்கு ஒரு வரைபடத்தையும் தார்மீக அடித்தளத்தையும் கொடுத்தனர். அந்த வழியில் நடப்பது நம் அனைவரின் பொறுப்பு. அவருடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாங்கள் பெரிய அளவில் வாழ்ந்திருக்கிறோம், ஆனால் காந்திஜியின் கொள்கைகளான ‘சர்வோதயா’ அதாவது அனைவரையும் மேம்படுத்துவது இன்னும் அடையப்படவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். இருந்தபோதிலும், அனைத்து துறைகளிலும் ஊக்கமளிக்கும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளோம்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர்: மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

அன்புள்ள நாட்டுமக்களே,

சர்வோதயா என்ற நமது நோக்கத்தில், பொருளாதாரத்துறையில் நாம் பெற்றுள்ள முன்னேற்றம் மிகவும் ஊக்கமளிக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற பின்னணியில் இருந்தபோது இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய தொற்றுநோய் அதன் நான்காவது ஆண்டில் நுழைந்துள்ளது; மற்றும் உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியில் அதன் தாக்கம் உணரப்படுகிறது. ஆரம்ப கட்டத்தில், இந்தியாவின் பொருளாதாரமும் கோவிட்-19 தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. ஆயினும்கூட, திறமையான தலைமை மற்றும் திறமையான போராட்டத்தின் பலத்தால், நாம் மந்தநிலையிலிருந்து விரைவில் வெளியேறி, வளர்ச்சிக்கான நமது பயணத்தைத் தொடங்கினோம். பொருளாதாரத்தின் பெரும்பாலான துறைகள் இப்போது தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து வெளியே வந்துள்ளன. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும். அரசு உரிய நேரத்தில் எடுத்த முயற்சியால்தான் இது சாத்தியமாகியுள்ளது. இந்நிலையில், ‘சுயசார்பு இந்தியா’ பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் தனி உற்சாகம் காணப்படுகிறது. இது தவிர, பல்வேறு துறைகளுக்கு சிறப்பு ஊக்கத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஒதுக்கப்பட்டவர்களும் திட்டங்களில் சேர்க்கப்பட்டு அவர்களின் சிரமங்களுக்கு உதவியிருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. மார்ச் 2020இல் அறிவிக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், கோவிட்-19 தொற்றுநோயின் திடீர் வெடிப்பால் நமது நாட்டு மக்கள் பொருளாதார சீர்குலைவை எதிர்கொண்ட நேரத்தில், ஏழை குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்தது. இந்த உதவியால் யாரும் வெறும் வயிற்றில் தூங்க வேண்டிய நிலையில்லை. ஏழைக் குடும்பங்களின் நலனை முதன்மையாக வைத்து, இந்தத் திட்டத்தின் காலம் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, சுமார் 81 கோடி நாட்டு மக்கள் தொடர்ந்து பயனடைந்தனர். இந்த உதவியை மேலும் நீட்டித்து, 2023ஆம் ஆண்டில்கூட, பயனாளிகள் தங்கள் மாதாந்திர ரேஷனை இலவசமாகப் பெறுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் மூலம், நலிவடைந்த பிரிவினரைப் பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன், பொருளாதார வளர்ச்சியிலும் அவர்களை ஈடுபடுத்துகிறது.

நமது பொருளாதாரத்தின் அடிப்படைகள் உறுதியான நிலையில், பலனளிக்கும் முயற்சிகளைத் தொடங்கவும், முன்னெடுத்துச் செல்லவும் நம்மால் முடிந்தது. அனைத்து குடிமக்களும் தனித்தனியாகவும் கூட்டாகவும் தங்கள் உண்மையான திறனை அடைந்து செழிப்பான வாழ்க்கையை வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே நமது இறுதி இலக்கு. இந்த நோக்கத்தை அடைவதற்கு கல்வி அடித்தளம் அமைக்கிறது, எனவே ‘தேசிய கல்விக் கொள்கையில்’ லட்சிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்வியின் முக்கிய நோக்கங்களை இரண்டு நோக்கங்களைக் கூறலாம். முதலாவதாக, பொருளாதார மற்றும் சமூக அதிகாரம்; இரண்டாவது, உண்மையைத் தேடுதல். இந்த இரண்டு இலக்குகளையும் அடைய தேசிய கல்விக் கொள்கை வழி வகுக்கிறது. இந்தக் கொள்கையானது நமது நாகரிகத்தின் அடிப்படையிலான அறிவை தற்கால வாழ்க்கைக்கு பொருத்தமானதாக ஆக்குகிறது, அதே நேரத்தில் 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு கற்பவர்களை தயார்படுத்துகிறது. இந்தக் கொள்கையில், கல்விச் செயல்முறைக்கு அகலத்தையும் ஆழத்தையும் வழங்குவதில் தொழில்நுட்பத்தின் முக்கியப் பங்கு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

கோவிட்-19இன் ஆரம்ப கட்டங்களில் தொழில்நுட்பம் வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்பதை நாம் பார்த்தோம். ‘டிஜிட்டல் இந்தியா மிஷன்’ திட்டத்தின் கீழ், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதன் மூலம் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொலைதூர இடங்களில் உள்ளவர்கள் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உள்கட்டமைப்பு விரிவாக்கத்தின் உதவியுடன், அரசு வழங்கும் பல்வேறு வகையான சேவைகளை மக்கள் பெறுகின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நாம் செய்துள்ள சாதனைகளைப் பற்றி நாம் பெருமைப்படலாம். விண்வெளி தொழில்நுட்பத் துறையில், இந்தியா சில முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்தத் துறையில் நீண்ட காலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இப்போது தனியார் நிறுவனங்கள் இந்த வளர்ச்சிப் பயணத்தில் சேர அழைக்கப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் ‘ககன்யான்’ திட்டம் நடந்து வருகிறது. இந்தியாவின் முதல் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணம் இதுவாகும். நட்சத்திரங்களை அடைந்த பிறகும் நாம் கால்களை தரையில் வைக்கிறோம்.

ALSO READ:  திமுக.,வினர் வழங்கிய பிரியாணி சாப்பிட்டு 40 மாணவர்கள் உள்பட பலர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியாவின் ‘மார்ஸ் மிஷன்’ அசாதாரண பெண்கள் குழுவால் வழிநடத்தப்பட்டது, மற்ற துறைகளில் சகோதரிகள் மற்றும் மகள்கள் பின்தங்கியிருக்கவில்லை. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான சமத்துவம் என்பது வெறும் கோஷங்கள் அல்ல. சமீப ஆண்டுகளில் இந்த இலட்சியங்களை அடைவதில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளோம். ‘பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவோம்; அவர்களை படிக்க வைப்போம்’ பிரச்சாரத்தில் மக்கள் பங்கேற்பதன் மூலம் ஒவ்வொரு பணித் துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது. நான் மாநிலங்களுக்குச் சென்றபோது, ​​கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிபுணர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, ​​இளம் பெண்களின் தன்னம்பிக்கையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நாளைய இந்தியாவை வடிவமைப்பதில் பெண்கள் அதிகபட்ச பங்களிப்பை வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மக்கள்தொகையில் பாதி பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தங்களால் இயன்ற அளவில் பங்களிக்க ஊக்கப்படுத்தினால், செய்ய முடியாத அற்புதங்கள் என்ன?

அதிகாரமளித்தல் பற்றிய இந்த பார்வை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் பணியை வழிநடத்துகிறது, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் உட்பட. உண்மையில், எங்கள் நோக்கம் அந்த மக்களின் வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி அவர்கள் வளர உதவுவது மட்டுமல்ல, அந்த சமூகங்களிலிருந்து கற்றுக்கொள்வதும் ஆகும். பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இருந்து சமூகத்தை மேலும் ஒருங்கிணைக்கச் செய்வது வரை பல பகுதிகளில் பாடங்களை வழங்க உள்ளனர்.
அன்பான நாட்டுமக்களே,

ஆட்சியின் அனைத்து அம்சங்களிலும் மாற்றங்களைக் கொண்டு வரவும், மக்களின் ஆக்கப்பூர்வமான ஆற்றலை வெளிக்கொணரவும் சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் விளைவாக, உலகச் சமூகம் இப்போது இந்தியாவை ஒரு புதிய மரியாதையுடன் பார்க்கிறது. உலகின் பல்வேறு அரங்குகளில் நமது செயல்பாட்டின் காரணமாக நேர்மறையான மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. உலக அரங்கில் இந்தியா பெற்ற மரியாதையின் விளைவாக, புதிய வாய்ப்புகளும் பொறுப்புகளும் நாட்டிற்கு கிடைத்துள்ளன. இந்த ஆண்டு ஜி-20 நாடுகளின் குழுவில் இந்தியா தலைமை வகிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உலகளாவிய சகோதரத்துவம் என்ற எங்கள் இலட்சியத்திற்கு ஏற்ப, அனைவருக்கும் அமைதி மற்றும் செழிப்புக்காக நாங்கள் நிற்கிறோம். ஜி-20 அமைப்பின் தலைவர் பதவியானது, சிறந்த உலகைக் கட்டியெழுப்புவதில் இந்தியாவுக்கு மிக முக்கியப் பங்கை அளிக்கிறது. எனவே, G-20இன் தலைவர் பதவியானது ஜனநாயகம் மற்றும் பலதரப்புவாதத்தை மேம்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும், அத்துடன் சிறந்த உலகத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் வடிவமைப்பதற்கான ஒரு தளமாகும். இந்தியாவின் தலைமையின் கீழ், ஜி-20 மிகவும் நியாயமான மற்றும் நிலையான உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான அதன் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.

ஒன்றாக, G-20 உறுப்பு நாடுகள் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 85 சதவிகிதம் ஆகும், இது உலகளாவிய சவால்களை விவாதிக்க மற்றும் எதிர்கொள்ள ஒரு சிறந்த மன்றமாக உள்ளது. என் பார்வையில், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை அவசரமாக கவனிக்கப்பட வேண்டிய சவால்கள். உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருகிறது மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிர வடிவங்கள் காணப்படுகின்றன. நாம் ஒரு தீவிரமான இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறோம்: மேலும் மேலும் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க பொருளாதார வளர்ச்சி அவசியம், ஆனால் இந்த வளர்ச்சிக்கு புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடும் தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, புவி வெப்பமடைதலின் அதிகபட்ச துன்பத்தை ஏழை மக்கள் தாங்க வேண்டியுள்ளது. மாற்று எரிசக்தி ஆதாரங்களை உருவாக்கி பிரபலப்படுத்துவதும் ஒரு தீர்வாகும். சூரிய ஆற்றல் மற்றும் மின்சார வாகனங்களுக்கு கொள்கை சலுகைகளை வழங்குவதன் மூலம் இந்தியா இந்த திசையில் ஒரு பாராட்டத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும், உலகளாவிய ரீதியில், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வளர்ந்த நாடுகளின் நிதி உதவி மூலம் உதவி வழங்க வேண்டிய அவசியம் உள்ளது.

ALSO READ:  தேசமே முதன்மை - என்ற உணர்வுடன் செயல்படும் அரசு: பிரதமர் மோடி உரை!

வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை பராமரிக்க, பழங்கால மரபுகளை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். நமது அடிப்படை முன்னுரிமைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாரம்பரிய வாழ்க்கை மதிப்புகளின் அறிவியல் பரிமாணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லையற்ற பிரபஞ்சத்தின் முன் இயற்கையின் மீதான மரியாதை மற்றும் பணிவு உணர்வை மீண்டும் ஒருமுறை நாம் மீண்டும் எழுப்ப வேண்டும். மகாத்மா காந்தி நவீன காலத்தின் உண்மையான தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார் என்பதை நான் கவனத்தில் கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் அவர் கட்டுப்பாடற்ற தொழில்மயமாக்கலின் பேரழிவை முன்னறிவித்து அதன் வழிகளை சரிசெய்ய உலகை எச்சரித்தார்.

நம் குழந்தைகள் இந்த பூமியில் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால், நாம் நமது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இந்த சூழலில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களில் ஒன்று உணவு தொடர்பானது. ஐக்கிய நாடுகள் சபை இந்தியாவின் ஆலோசனையை ஏற்று 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். தினை போன்ற கரடுமுரடான தானியங்கள் நமது உணவில் பிரதானமாக இருந்தது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மீண்டும் அவற்றை விரும்பத் தொடங்கியுள்ளனர். இத்தகைய தானியங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை, ஏனெனில் அவை உற்பத்தி செய்ய குறைந்த அளவு நீர் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த தானியங்கள் உயர் மட்ட ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன. அதிகளவானோர் கரடுமுரடான தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால், அது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உதவுவதோடு, மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

குடியரசின் மற்றொரு ஆண்டு கடந்து புதிய ஆண்டு தொடங்க உள்ளது. இது முன்னோடியில்லாத மாற்றத்தின் காலம். தொற்றுநோய் வெடித்ததால் உலகம் சில நாட்களில் மாறிவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், எப்பொழுதெல்லாம் வைரஸ்ஸிலிருந்து தப்பிவிட்டோம் என்று நினைத்தோமோ, அப்போதெல்லாம் வைரஸ் ஒரு உருமாறிய வடிவத்தில் மீண்டும் வந்தது. ஆனால், இப்போது பீதி அடையத் தேவையில்லை, ஏனென்றால் நமது தலைமை, நமது விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள், நமது நிர்வாகிகள் மற்றும் ‘கொரோனா போர்வீரர்கள்’ எந்தச் சூழலையும் சமாளிக்க முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அதே நேரத்தில், நாங்கள் எங்கள் பாதுகாப்பைக் குறைக்க மாட்டோம், விழிப்புடன் இருப்போம் என்பதையும் நாங்கள் கற்றுக்கொண்டோம்.

அன்பான நாட்டுமக்களே,

பல்வேறு துறைகளில் பணிபுரியும் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை நமது குடியரசின் வளர்ச்சிக் கதையில் அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக பாராட்டுக்குரியவர்கள். “ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான், ஜெய் அனுசந்தான்” என்ற உணர்வில் நமது நாடு முன்னேறிச் செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் பங்களிப்பை நான் பாராட்டுகிறேன். நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் ஒவ்வொரு குடிமகனையும் நான் பாராட்டுகிறேன். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தின் முன்னோடிகளான வெளிநாட்டு இந்தியர்களையும் நான் வாழ்த்துகிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், நமது எல்லைகளைக் காத்து, எந்தத் தியாகத்திற்கும் தியாகத்திற்கும் எப்போதும் தயாராக இருக்கும் துணிச்சலான வீரர்களைப் பாராட்ட விரும்புகிறேன். நாட்டு மக்களுக்கு உள்நாட்டுப் பாதுகாப்பை வழங்கும் அனைத்து துணை ராணுவப் படைகள் மற்றும் காவல்துறையின் துணிச்சலான வீரர்களையும் நான் பாராட்டுகிறேன். கடமையில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த நமது ராணுவம், துணை இராணுவப் படைகள் மற்றும் காவல்துறையின் அனைத்து மாவீரர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். அனைத்து அழகான குழந்தைகளையும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நான் மனதார வாழ்த்துகிறேன். நாட்டுமக்கள் அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,
ஜெய் ஹிந்த்!
ஜெய் பாரத்!

author avatar
Dhinasari Reporter

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari