ஊழல் வழக்கு பதிவு: ம.பி., ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவு

இந்தியா

ram-naresh-yadavபுது தில்லி: ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக ம.பி. ஆளுநரை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வனக் காப்பாளர் பணி நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்டதாக மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரிய ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் அரசியல்வாதிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை தொடர்பு படுத்தப் பட்டுள்ளனர். இந்த ஊழலில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு தொடர்பு இருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆளுனரின் சிறப்பு தனி அதிகாரி தனராஜ் யாதவ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அம்மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவ் (வயது 86) மீது நேற்று ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல், மோசடி ஆகிய குற்றங்களுக்காக அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 5 பேரை வனக் காப்பாளர்களாக நியமிக்க பரிந்துரை செய்தார், நேர்மைக்கு மாறாக அவர்கள் தேர்வெழுதி வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.