மாயமான மலேசிய விமானம்: அண்டார்டிகாவுக்கு ஒருவர் திருப்பியதாக தகவல்!

Published:

Malaysia-Airlinesகோலாலம்பூர்: கடந்த ஆண்டு 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை ஒரு நபர் அண்டார்டிகாவுக்கு திருப்பியதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிக்கு 239 பயணிகளுடன் 2014 மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான எம்.எச்.370 போயிங் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. மேலும், அதில் இருந்த பயணிகளும் என்ன ஆனார்கள் என்பது சுமார் ஓர் ஆண்டு கடக்கும் நிலையிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இருப்பினும், விமான பயணிகளின் உறவினர்களை சமாதானப் படுத்தவும், உலகுக்கு தகவலைத் தெரிவிக்கவும் மாயமான அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியானதாகவும் மலேசிய அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இருப்பினும், ஒரு புறம் அந்த விமானத்தை தேடும் பணியும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மாயமான மலேசிய விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகாவை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஆவணப் படத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் எம்.எச்.370 விமானம் 3 முறை தனது பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டது. 3–வது முறை திசை திருப்பப்பட்ட போது, அது அண்டார்டிகா நோக்கி சென்றிருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, விமான போக்குவரத்து நிபுணர் மால்கம் பிரெனர், விமானிகள் அறையில் இருந்த ஒருவரால் விமானம் வேண்டுமென்றே அண்டார்டிகா நோக்கி இயக்கப்பட்டது. அந்த விமானம் என்ன ஆனது என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என்றார். இந்த விமானம் குறித்து ரஷ்யாவில் இருந்து வெளிவரும் ’மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், இந்த விமானம் பயங்கரவாதிகளால் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டது. அங்கு பயணிகள் அனைவரும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானம் தற்போது பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், வேறொரு தகவல் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதாகக் கூறுகிறது. அந்தத் தகவலின் படி, அமெரிக்க–தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டுப் போர்ப் பயிற்சியின்போது அது சுட்டு வீழ்த்தப்பட்டதாம். இன்னொரு தகவல், அமெரிக்கா தனது விமானப் படைத் தளமான டிகோ கார்சியோவில் அந்த மலேசிய விமானத்தை கட்டாயப்படுத்தி தரை இறக்கியதாம். ஆனால், ஆதாரமற்றது என்று இந்தத் தகவலை மலேசியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துள்ளது. மலேசியாவுக்கான அமெரிக்க செய்தித் தொடர்பாளர் இது குறித்துக் கூறுகையில், ‘‘ஊகத்தின் அடிப்படையிலான இந்தத் தகவலில் எந்த உண்மையும் கிடையாது. எம்.எச்.370 விமானம் மாலத்தீவு அருகிலோ, டிகோ கார்சியா தீவின் அருகிலோ பறந்ததாக எந்தத் தகவலும் இல்லை’’ என்று மறுத்தார். முன்னதாக, மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு மாயமான மலேசிய விமானம் குறித்து தெரியும் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் யாரோ எதையோ மறைக்கிறார்கள். ஏனெனில் இதுபோன்று வெளியில் எந்த சத்தமுமின்றி திரைமறைவு வேலைகளைச் செய்ய அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும் என்று வலைத்தளம் ஒன்றில் அவர் கூறியிருந்தார். மார்ச் 8 நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விமானம் காணாமல் போய் ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரையிலான வரலாற்றில், எந்தவொரு விமானமும் சிறிதளவு பாகம் கூடக் கிடைக்காமல் முற்றிலும் இவ்வாறு காணாமல் போய் தகவல் கிடைக்காமல் இருந்ததில்லை. அதுபோல், காணாமல் போனதாக அறிவிக்கப் பட்ட ஒரு விமானத்தைத் தேட இதுவரை ஒரு வருடத்துக்கும் அதிகமாக எடுத்துக் கொண்டதுமில்லை. இந்நிலையில், இந்த விமானம் குறித்து வெளியான தகவல்கள் பயணிகளின் உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

Related articles

Recent articles

spot_img