அமைச்சர் அறிவித்தபடி ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் இயங்குமா?

இந்தியா

Drinking-Water நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்த 2015-2016ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வழக்கம்போல், ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். இது கடந்த ரயில்வே பட்ஜெட்ட்களிலும் அறிவிக்கப்பட்டு அவ்வப்போது துவங்கப்பட்டதுதான். இன்று பெரும்பாலான ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இயங்கும் நிலையில் உள்ளனவா என்றால் இல்லை என்றே கூறலாம். மிகப் பெரிய ரயில் நிலையங்கள் அல்லாத ரயில் நிலையங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு, அவை பயணிகளால் பயன்படுத்தப் படாத நிலையிலேயே உள்ளன. இதற்குக் காரணமாகக் கூறப்படும் ஒரே காரணம், தண்ணீர் பாட்டில்கள் வியாபாரம் கெட்டுப் போவது என்கின்றனர் ரயில் நிலையங்களில் இருப்பவர்கள். குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சரியாக வேலை செய்தால், பயணிகள் தங்களிடம் குடிநீர் பாட்டில்களை வாங்க மாட்டார்கள் என்ற காரணத்தால், ரயில் நிலையங்களில் கடைகளை வைத்திருப்போரே குடிநீர் இயந்திரங்களை உடைத்து விடுவதாக பலர் புகார் கூறுகின்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் என்றும், அவற்றின் மூலம் மிகக் குறைந்த விலையில் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப் போகத்தான் தெரியும். காரணம், இயந்திரங்களை வைத்தால் மட்டும் போதாது, அதன் பாதுகாப்பை ரயில் நிலைய அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்பதே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.