
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு,இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் வரிசைகளில் நின்று, மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை காலையிலேயே பதிவு செய்தார்.
காலை 9 மணி நிலவரப்படி 8.21 சத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப் பட்டது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படும்.
கர்நாடகாவில் புதிய சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது.
ஆளும் பாஜக., காங்கிரஸ், மஜத., உட்பட பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் என 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும், 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.