
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வரும் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த எதிர்க்கட்சிகளின் – மகாகட்பந்தன் – இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக.,வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் திரட்டி ஒரு கூட்டணியை அமைப்பது என்றும், பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு பொதுவான பிரதமர் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக கடந்த 23 ஆம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல், தமிழக முதல்வர் ஸ்டாலின், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ராகுல் திருமணம் செய்து கொண்டு வாரிசுகளுடன் திகழ வேண்டும் என்ற ஆசையை தலைவர்கள் சிலர் வெளிப்படுத்தினர். இந்தக் கூட்டத்தின் முடிவில் அடுத்த கூட்டம் ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப் பட்டது.
ஆனால், திடீரென சில தினங்களுக்கு முன் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக., அரசு பொது சிவில் சட்ட கருத்துக் கேட்பு அறிவிப்பை வெளியிட்டு, அதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பாஜக.,வின் இந்த நடவடிக்கை, மத்திய அரசுக்கு ஒட்டு மொத்த எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து மாறி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி முதலில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து மாயாவதி உள்ளிட்டோர் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக, பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பவாரின் கட்சி, இரண்டாகப் பிரிந்தது. அக்கட்சியின் முக்கியத் தலைவரும், மகாராஷ்டிர சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸை இரண்டாகப் பிரித்து, தன்னுடன் 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைக் கொண்டு, ஆளும் கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வர் ஆகி விட்டார். இந்நிலையில், அக்கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து வரும் ஜூலை 5 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறு எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டமான பாட்னாவில் கலந்து கொண்ட முக்கிய இரு கட்சிகள் தடம் புரண்டதால், அடுத்து பெங்களூருவில் ஜூலை 13,14ல் நடைபெற இருந்த இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்குக் காரணமாக, பீஹார் சட்டசபைக் கூட்டம் நடைபெறுவதால் இந்த திடீர் முடிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தெரிவித்து வரும் கருத்துகள் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் சிவகுமார் தெரிவித்த கருத்துக்கள் தமிழகத்தில் அரசியல் ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு இதுகுறித்து கேள்வி எழுப்பியதுடன், இந்த இரண்டாவது கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்துக்கு திரும்ப வரும் பொழுது போராட்டம் நடத்துவதாக அறிவித்தார். இதனால் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள திமுகவுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதை அடுத்து பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தை வேறு மாநிலத்துக்கு மாற்றி அமைக்குமாறு ஸ்டாலின் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டாவது கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதனால் இந்தக் காலத்திலும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.