
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா திடலில் பாஜக., சார்பில் நடந்த குமரி சங்கமம் நிகழ்ச்சிக்கு பாஜக., தொண்டர்கள் அலைகடலெனத் திரண்டு வந்தனர். அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த 1969-ல் காமராஜர் குமரி மண்ணில் போட்டியிட்ட போது, கருணாநிதி நாடார் சமூகத்தை ஹிந்து நாடார், கிறிஸ்தவ நாடார் எனப் பிரித்தார். காமராஜர் வெற்றி பெற்றார். அப்போது கருணாநிதி ‘நடந்தது நாடாளுமன்றத் தேர்தல் அல்ல; நாடார் மன்றத் தேர்தல்’ என்றார். பின்னர் 1971-ல் தேர்தல் பிரசாரத்துக்கு கருணாநிதி குமரி வரவில்லை. அப்போது ‘நெல்லை எங்கள் எல்லை; குமரி எங்கள் தொல்லை’ என்றார்.
இங்கே பிரசாரத்துக்கு வந்த மோடி, குமரி மாவட்டத்தை தன் சொந்த மாவட்டமாக பாவித்தார். மீனவர்கள் இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது. மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கியவர் பிரதமர் மோடி. இணை அமைச்சராக எல்.முருகனை நியமித்து தமிழகத்துக்குப்கு பெருமை சேர்த்தார். தமிழகத்தில், மீனவ சொந்தங்களுக்கு மீன் விவசாயி என பிரதமர் பெயர் வைத்துள்ளார். மொத்தம் 33 லட்சம் மீன் விவசாயிகளுக்கு கிசான் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக எந்த துப்பாக்கி சூடும் நடக்கவில்லை. மீனவர்கள் ஆழ்கடல் செல்லும் போது, உங்கள் படகில் மோடி அமர்ந்திருக்கிறார் என, நினைக்க வேண்டும். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என திமுக., சொன்னது. இந்த செங்கல் தான் 2 லட்சம் வீடு. உடனே எய்ம்ஸ் பற்றி பேசுவர். தில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்று கட்ட திட்டமிட்டுள்ளோம். மதுரை எய்ம்ஸ் 2026 மார்ச்சில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
உங்கள் தேர்தல் வாக்குறுதியில், மதுரையில் வேளாண் பல்கலை வாக்குறுதி என்ன ஆனது. வேளாண் பல்கலை செங்கல்லாக தான் இருக்கிறது. (அக்ரி யுனிவ் என்று எழுதப் பட்ட செங்கல்லைத் தூக்கிக் காட்டினார் அண்ணாமலை)
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு செயல்படுத்தாததால் அமலாக்கத்துறை கைது செய்தது. அவரைக் கைது செய்த ஐந்து நிமிடத்தி, ஐந்து அடைப்பு வருகிறது. இப்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சங்கீதா இட்லி போகிறது. ஓர் ஊழல்வாதியை பாதுகாக்க ஸ்டாலின் அரசு போலீசை பயன்படுத்துகிறது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து விட்டது என சரத்பவார் பேட்டி கொடுத்த பத்து நாட்களில் அவரது 40 எம்எல்ஏ.,க்கள் பாஜக,, கூட்டணியில் சேர்ந்து விட்டனர்.
காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சொல்லி விட்டார். இதற்கு திமுக., கூட்டணிக் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?
வரும் தேர்தலில் 400க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக., வெல்லும். பொது சிவில் சட்டம் வரும். அந்த சட்டத்தால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகமாக பயன் பெறுவர். கொரோனா காலத்தில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ நடத்துவதற்கு மட்டும் அமைச்சர் மனோ தங்கராஜ், 2.55 கோடி ரூபாய் செலவு எழுதியுள்ளார். இப்போது பால்வளத்துக்கு சென்றுள்ளார். கன்னியாகுமரியில் வெற்றி பெறுபவர் நிச்சயமாக மத்தியில் கேபினட் அந்தஸ்து பெறுவார் என்று பேசினார் அண்ணாமலை.
கன்னியாகுமரி கூட்டம் குறித்து தனது சமூகத் தளப் பக்கங்களில் அண்ணாமலை பகிர்ந்தவை…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது 9 ஆண்டு கால சாதனை குறித்து, மாவட்டத் தலைவர் திரு தர்மராஜ் அவர்களது தலைமையில் நடைபெற்ற #குமரி_சங்கமம் பொதுக்கூட்டத்தில், குமரி கடல் அலை போல ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
குமரி மண், மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட அய்யா வைகுண்டர் அவதரித்த மண். விவேகானந்தர் ஞானம் பெற்ற மண். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தாணுலிங்க நாடார், தளவாய் வேலுத்தம்பி உள்ளிட்ட சிறந்த மனிதர்கள் பிறந்த மண். கலைஞர் கருணாநிதி அவர்கள், பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடிக்க இந்து கிறிஸ்தவர்கள் என்று பிரித்து அரசியல் செய்ய முயற்சித்தாலும், இறுதியில், பெருந்தலைவர் காமராஜரை இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு அனுப்பிய பெருமை உடைய மண். நெல்லை எங்கள் எல்லை, குமரி எங்கள் தொல்லை என்று இறுதியில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் புலம்ப விட்ட மண்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் மற்றும் மீனவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறார்.
மாண்புமிகு பிரதமர் அவர்கள், மீனவர்கள் உயிர் உடமைகளுக்குப் பாதுகாப்பு உறுதி செய்திருக்கிறார். விவசாயத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினைப் போல், மீனவர்களையும் மீன் விவசாயிகள் என்று பெருமைப்படுத்தியுள்ளார். ஆனால், திமுக மீனவர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்காக எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தாமல், ஊழல்வாதிகளைக் காப்பாற்றுவதையே ஒட்டு மொத்த திமுக அரசும் செய்து வருகிறது. இத்தகைய ஊழல்வாதிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
அனைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் தொடர, மண்ணையும் மக்களையும் பாதுகாக்க, உலக அரங்கில் நமது நாடு மேலும் மேலும் உயர, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர வேண்டும். தமிழகத்திலிருந்தும் பெரும்பான்மையான எம்பிக்கள் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில் பங்கேற்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் அடுத்த ஒன்பது மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் , மாநிலப் பொதுச்செயலாளர் திரு பொன் பால கணபதி, மாநிலத் துணைத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு MR காந்தி, மாநிலச் செயலாளர் திருமதி மீனா தேவ், மாநில மகளிரணித் தலைவி திருமதி உமாரதி ராஜன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- கே.அண்ணாமலை, தமிழக பாஜக., தலைவர்