
சென்னை திருப்பதி செல்லும் ரயில்கள் இந்த நாட்களில் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது…
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணி மற்றும் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்கள் (எண்கள் 06727,16203), மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.35 மணி மற்றும் காலை 6.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் (எண்கள் 06728,16204) இன்று முதல் ஆக.10 -ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த தேதிகளில் அரக்கோணம் – திருப்பதி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலும் (எண்கள் 06753, 06754) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
விரைவு ரயில்கள்: திருப்பதி – புதுச்சேரி விரைவு ரயில் (எண்கள் 16111/16112), ஜூலை 12 முதல் ஆக.11-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். மீண்டும் ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி சென்றடையும்.
சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில்கள் (எண்கள் 16057/16058 மற்றும் 16054/16053) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.10-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். பின்னா் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
மேலும், விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள் 16854/ 16853) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.10-ந் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். பின்னா் காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.
ராமேசுவரம் – திருப்பதி இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள்: 16780/16779) நாளை (13-ந் தேதி) முதல் ஆக.10-ந் தேதி வரை பாகாலாவுடன் நிறுத்தப்படும். பின்னா் பாகாலாவிலிருந்து புறப்பட்டு ராமேசுவரம் சென்றடையும்.
காக்கிகூடா – மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்கள் 07191/07192) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.9-ந் தேதி வரை திருப்பதி, சித்தூா் வழியாக செல்வதற்கு பதிலாக மேலபாக்கம் வழியாக இயக்கப்படும்.