தமிழக அரசு மதசார்பற்றதாக இருக்கலாம், ஆனால் அறநிலையத்துறை இந்து மத சார்பானதுதான், அது இந்து மதம் மற்றும் பண்பாட்டைப் பரப்பும் செயலைத்தான் செய்ய வேண்டும் என்று கூறினார் பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா.
பழனி மலைக்கோவில் பாதுகாப்புப் பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக., மூத்த தலைவரும் முன்னாள் தேசியச் செயலாளருமான எச்.ராஜா, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவதற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஹெச்.ராஜா. அப்போது அவர்…
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை மத சார்புடையதுதான்.
அறநிலையத்துறை என்பது இந்து மதம் மற்றும் பண்பாட்டை பரப்பக்கூடிய செயலைச் செய்யவேண்டும். அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
கள்ளிமந்தையம் பகுதியில் பழனி கோவிலுக்கு சொந்தமான கோசாலை பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. இங்குள்ள பல மாடுகள் கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்பப்படுகிறது. பசுக்களை இல்லாமல் செய்துவிட்டு 288 ஏக்கரில் அமைந்துள்ள கோசாலை நிலத்தை சிப்காட் நிறுவனம் அமைக்கக் கொடுக்க சேகர்பாபு முயற்சி செய்கிறார்.
இந்து சமய அறநிலையத்துறைதான் அரசுக்கு சொந்தமானது. இந்து கோவில்கள் அரசுக்குச் சொந்தமானது இல்லை. அது இந்து மக்களுக்குச் சொந்தமானது. பழனி கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால் கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் முன்பு நடந்த சம்பவம் போல வரும் காலங்களில் பழனி கோவிலில் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது பெரிய பிரச்சனையாக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது கேலிக்குரியது. பாமக., தொண்டர் வெட்டிக்கொலை, விசாரணை கைதி மரணம் ஆகியவை நடந்துள்ள நிலையில், முதலமைச்சருக்கு தங்களது குடும்பத்தில் எப்போது சி.பி.ஐ. நுழையுமோ என்ற அச்சம், துர்கா ஸ்டாலின் தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால், சிபிஐ., தமிழகத்திற்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தெளிவாக விளக்குகிறது.
திமுக., ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம். இது, குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயல்கிறது, 38 நாட்களாக ஓர் அமைச்சரை மருத்துவமனையில் வைத்துள்ளது. அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. சட்டத்தை மதிக்காமல் முதலமைச்சரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று கூறினார் ஹெச்.ராஜா.