
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாகக் கட்டப்பட்ட தபால் நிலையத்தை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்.
3டி பிரிண்டிங் மூலமாகக் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் பெங்களூருவில் கேம்பிரிட்ஜ் லே அவுட் பகுதியில் அமைக்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு பல புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. அதுபோன்று 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட கட்டடத்தை கட்டுவது ஒரு சிறந்த முயற்சி’ என்று கூறினார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, ‘பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவின் முதல் 3டி பிரிண்டிங் மூலமாகக் கட்டப்பட்ட தபால் நிலையத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். நமது தேசத்தின் கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு ஒரு சான்றாக, இது விளங்குகிறது. இதற்காக உழைத்தவர்களுக்கு பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.