
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடர் நவம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
10 அணிகள் உலகோப்பைக்கு தேர்வு பெற்றது எப்படி?
ஐசிசி 50 ஓவர் 13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து – நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன. உலகக் கோப்பை தொடரை நடத்தும் அணி என்ற அடிப்படையில் இந்தியா, நேரடியாக பங்கேற்கிறது.
ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் தொடரில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்த 13 அணிகள் இடையிலான, 83 போட்டிகள் (இருதரப்பு மோதல்) முடிவில் ‘டாப்-7′ அணிகள் உலக தொடருக்கு முன்னேறின.
இதன்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் என 7 அணிகள் தகுதி பெற்றன. மீதமிருந்த 5 அணிகள் உலக கோப்பை தகுதிச்சுற்றில் மோதின. முடிவில் இலங்கை, நெதர்லாந்து முன்னேற, மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன.
உலக கோப்பை அரங்கில் முதல் இருமுறை (1975, 1979) சாம்பியன் ஆனது வெஸ்ட் இண்டீஸ். தகுதிச்சுற்றில் ஏமாற்றிய இந்த அணி, 48 ஆண்டுகளில் முதன் முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெறாமல் வெளியேறியது.
உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் முன்னிலையில் உள்ளார்.
இவர், 45 போட்டியில், 6 சதம், 15 அரைசதம் உட்பட 2278 ரன் குவித்துள்ளார்.
‘டாப்-5’ பேட்ஸ்மேன்கள்
- சச்சின் (இந்தியா) 45 போட்டிகளில் 6 சதம் உட்பட 2278 ரன்கள்
- பாண்டிங் (ஆஸி.,) 46 போட்டிகளில் 5 சதம் உட்பட 1743 ரன்கள்
- சங்ககரா (இலங்கை) 37 போட்டிகளில் 5 சதம் உட்பட 1532 ரன்கள்
- லாரா (வெ.இ.,) 34 போட்டிகளில் 2 சதம் உட்பட 1225 ரன்கள்
- டிவிலியர்ஸ் (தெ.ஆ.,) 23 போட்டிகளில் 4 சதம் உட்பட 1207 ரன்கள்
உலக கோப்பை அரங்கில் அதிக சதமடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின், ரோகித் சர்மா முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இருவரும் தலா 6 சதம் அடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், இலங்கையின் சங்ககரா தலா 5 சதத்தை பதிவு செய்துள்ளனர்.
உலக கோப்பை அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத், முன்னிலை வகிக்கிறார். இவர், 39 போட்டியில், 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
இவ்வரிசையில் ‘டாப்-10’ பவுலர்கள்
- மெக்ராத் (ஆஸி.,) 39 போட்டிகளில் 71 விக்கெட்கள்
- முரளிதரன் (இலங்கை) 40 போட்டிகளில் 68 விக்கெட்கள்
- மலிங்கா (இலங்கை) 29 போட்டிகளில் 56 விக்கெட்கள்
- அக்ரம் (பாக்.,) 38 போட்டிகளில் 55 விக்கெட்கள்
- ஸ்டார்க் (ஆஸி.,) 18 போட்டிகளில் 49 விக்கெட்கள்
- வாஸ் (இலங்கை) 31 போட்டிகளில் 49 விக்கெட்கள்
- ஜாகிர் (இந்தியா) 23 போட்டிகளில் 44 விக்கெட்கள்
- ஸ்ரீநாத் (இந்தியா) 34 போட்டிகளில் 44 விக்கெட்கள்
- தாகிர் (தெ.ஆ.,) 22 போட்டிகளில் 40 விக்கெட்கள்
- பவுல்ட் (நியூசி.,) 19 போட்டிகளில் 39 விக்கெட்கள்