
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
31ஆம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 04.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பெங்களூருவில் பகல்நேர ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்
நியூசிலாந்து அணியை (401/6, ரச்சின் ரவீந்த்ரா 108, கேன் வில்லியம்சன் 95, கிளன் பிலிப்ஸ் 41, மார்க் சாப்மன் 39, கான்வே 35, டேரில் மிட்சல் 29, முகம்மது வாசிம் 3/60) பாகிஸ்தான் அணி (25.3 ஓவர்களில் 200/1, ஃபகர் ஜமான் 126*, பாபர் ஆசம் 66*) 21 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த்-லூயிஸ் முறையில் வென்றது.
பூவாதலையா வென்ற பின்னர் பாகிஸ்தான் அணி பந்துவீசத் தீர்மானித்தது. இது ஒரு ஆச்சரியமான விஷயம். ஏனெனில் பெங்களூரு விக்கட் முதல் இன்னிங்க்ஸில் பேட்டர்களுக்குச் சாதகமாக இருக்கு. ஆட்டத்தின் பிற்பாதியில் மழை வருவதற்கான வாய்ப்பும் இருந்தது. அதனால் பாகிஸ்தான் அணி பந்துவீசத் தீர்மனித்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கேற்றார் போல நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் அருமையாக ஆடினர். பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் இரண்டு லெக்ஸ்பின்னர்களும் இல்லாமல் விளையாடியது. அதுவும் ஆச்சரியமான விஷயம். கான்வே ஆட்டமிழந்த பின்னர் ஆடவந்த வில்லியம்சன் ரவீந்திராவுடன் இணைந்து ரன் குவித்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 401 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் ஆடத் தொடங்கியபோது, அவர்களும் அதிரடியாக ஆடினர். அவர்களின் இன்னிங்க்ஸ் தொடங்கும் முன்னர் மழை குறுக்கிட்டது. ஃபகர் ஜமான் ஆட்டமிழக்காமல் 126 ரன்னும் (81 பந்துகள், 11 சிக்சர், 8 ஃபோர்), பாபர் ஆசம் ஆட்டமிழக்காமல் 66 ரன்னும் அடித்தனர். மீண்டும் ஒரு முறை மழை குறுக்கிட்டது. அதனால் இலக்கு 41 ஓவர்களில் 341 எனக் குறைக்கப்பட்டது. ஆட்டம் மறுபடி தொடங்கியபோது மழை மீண்டும் வர வாய்ப்பிருக்கிறது என நன்றாகத் தெரிந்தது. எனவே பாகிஸ்தானின் ஃபகர் ஜமானும் பாபர் ஆசமும் 23ஆவது ஓவரில் 12 ரன்னும், 24ஆவது ஓவரில் 7 ரன்னும், 25ஆவது ஓவரில் 20 ரன்னும் எடுத்தனர். அப்போது மழை வந்தது. சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் கைவிடப்பட்டது. பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த்-லூயிஸ் முறையில் வென்றது. ஆட்டநாயகனாக ஃபகர் ஜமான் அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து
ஆஸ்திரேலிய அணி (49.3 ஓவர்களில் 286, லபுசேன் 71, காமரூன் கிரீன் 47, ஸ்மித் 44, ஸ்டோயினிஸ் 35, சாம்பா 29, கிரிஸ் வோக்ஸ் 5/54) இங்கிலாந்து அணியை (48.1 ஓவரில் 253, பென் ஸ்டோக்ஸ் 64, டேவிட் மலான் 50, மொயின் அலி 42, கிரிஸ் வோக்ஸ் 32, ஆடம் சாம்பா 3/21, மிட்சல் ஸ்டார்க் 2/66, ஹேசல்வுட் 2/49, பேட் கம்மின்ஸ் 2/49) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை முதலில் மட்டையாடச் சொன்னது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (11 ரன்) மற்றும் வார்னர் (15 ரன்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மித் மற்றும் லபுசேன் இணைந்து ஆடி அணியின் ஸ்கோரை நிலைப்படுத்த முயற்சிக்கும்போது ஸ்மித் ஆடமிழந்தார். அதன் பின்னர் இங்கிலிஷும் ஆட்டமிழந்தார். லபுசேனும் கிரீனும் ஜோடி சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் ஒரு நெடிய பார்ட்னர்ஷிப் அமையாததால் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 286 ரன் எடுத்தது.
இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜானி பெயர்ஸ்டோ முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் ஐந்தாவது ஓவரில் அவுட் ஆனார். அதன் பின்னர் டேவிட் மலானும் பென் ஸ்டோக்ஸும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். மலான் (50 ரன்) 23ஆவது ஓவரிலும் ஜாஸ் பட்லர் (1 ரன்) 26ஆவது ஓவரிலும் பென் ஸ்டோக்ஸ் (64 ரன் 36ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்கள் வேகமாக ரன் அடிக்க முடியவில்லை. அதனால் 40ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 60 பந்துகளில் 100 ரன் தேவைப்பட்டது. அதனை எடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 48.1 ஓவரில் 253 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. ஆடம் சாம்பா ஆட்டநாயகனாக அரிவிக்கப்பட்டார்.
இன்றைய முடிவுகளின் பின்னர் இந்தியா (14 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்கா (12 புள்ளிகள்) இரண்டும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன. இந்த இரண்டு அணிகளும் இன்னமும் இரண்டும் ஆட்டங்கள் ஆடவேண்டும். ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது (இன்னமும் 2 ஆடங்கள் மீதமுள்ளன. நியூசிலாந்து (8 புள்ளிகள், மீதம் ஒரு ஆட்டம்), பாகிஸ்தான் (8 புள்ளிகள், மீதம் ஒரு ஆட்டம்), ஆப்கானிஸ்தான் (8 புள்ளிகள், மீதம் 2 ஆட்டங்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நாளை இந்திய, தென் ஆப்பிரிக்க அணிகள் கொல்கத்தாவில் விளையாடுகின்றன.