புது தில்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டுப் புகாரில் நேற்று சென்னை விமான நிலையத்தில் சிபிஐ.,யால் கைது செய்யப் பட்டார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். அவரை உடனே தில்லிக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் நீதிமன்றக் காவல் பெற்றது சிபிஐ., ஆனால் சிபிஐ நினைத்தது நிறைவேறவில்லை. அதற்குக் காரணம் கெட்டியாக இருந்த கார்த்திதான்!
இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜரான சிபிஐ., கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்றும், கார்த்தி சிதம்பரத்திடம் ஒரு நாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. சிபிஐ தரப்பு வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், தில்லி பாட்டியாலா வளாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் காவல் அளிக்க சிபிஐ கோரியும் 1 நாள் காவல் மட்டுமே வழங்கியது நீதிமன்றம். அதற்கு நீதிபதி விடுப்பில் இருப்பதால், மாற்று நீதிபதியின் உத்தரவைப் பெற்றதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை கார்த்தி சிதம்பரம் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேரில் வந்து பார்வையாளர் மாடத்தில் இருந்த படி பார்த்தார்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்த அவர், ‘தான் இருப்பதாகவும்’, அஞ்சாமல் வழக்கை சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல, கார்த்தி சிதம்பரத்தின் தாயார், நளினி சிதம்பரமும் நீதிமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளைப் பார்வையிட்டார்.
Delhi: CBI in Patiala House Court seeks 14 day remand of #KartiChidambaram . CBI said ‘Interrogation has only taken place for a short time.He did appear for interrogation, but remained evasive.Custodial interrogation is completely different’ #KartiChidambaram #INXMediaCase
— ANI (@ANI) March 1, 2018
நேற்று இரவு கார்த்தி சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அப்போது அவர் உடல் நலம் பற்றி எந்தக் குறையும் சொல்லாத நிலையில், டாக்டர் ஷகில் அகமது அவரை இதய நோய் சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்ததாகவும், இன்று காலை 7.50 மணிக்கு தான் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகம் அழைத்து வரப் பட்டதாகவும், காலை 10 மணி வரை அவர் வெளியில் வருவதற்குத் தயாரானார் என்றும், எனவே சிபிஐயால் கார்த்தி சிதம்பரத்திடம் எந்த ஒரு விசாரணையும் நடத்த முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
எனவே கார்த்தி சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்க்வியின் டிவிட்டர் பக்கத்தில் சிலர் கார்த்தி டிவிட்டரில் கூறியதாக சிலவற்றை முன்வைத்துள்ளனர்.
நீங்கள் நீதிமன்றத்தில் உங்கள் க்ளையண்ட் உலகளாவிய ஹெச்என்ஐ (High Net worth Individual) வைத்திருப்பதாகவும், எந்த நாடுகளுக்கும் செல்வதற்கு/ வெளியே வருவதற்கு பாஸ்போர்ட் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார். அதை நினைவில் கொள்ளவும்.
மேலும், அவர் டாலரில் வெல் செட்டில் ஆனவர் என்று அவரே கூறியிருக்கிறார் என்பதையும் நீதிமன்றத்தில் குறிப்பிடவும் என்று நக்கல் அடித்திருக்கிறார்கள்.
Sir @DrAMSinghvi You should have told the court that your client is ‘Global HNI’ and does not need passport to enter/exit many countries.
Also you could inform that he is well settled in $$… Your client @KartiPC has claimed it himself.👇👇snapshots for your info pic.twitter.com/MyElru7y9x— रंगा – ரங்கா (@ranganaathan) March 1, 2018
அதற்காக ஒரு ஸ்க்ரீன்-ஷாட்டையும் இணைத்திருக்கிறார்கள். அதில் தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் உரையாடிய பதிவுகள் காணக் கிடைக்கின்றன. இவற்றை முன்வைத்து, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக கம்பு சுற்றுகிறார்கள் சிலர்.
ஆயினும் அபிஷேக் மனு சிங்க்வியோ, இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் மட்டுமே கார்த்திக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் வாதிட்டு வருகிறார். மேலும், இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் எப்படி லீக் ஆனது என்றும், அது எப்படி வாட்ஸ் அப்களில் சுற்றி வருகிறது என்றும் கேள்வி எழுப்புகிறார்.
இதனிடையே தில்லி பாட்டியாலா வளாக நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ஜாமீன் மனு விவகாரத்தில் தனது உத்தரவை நிறுத்தி வைத்து, மார்ச் 7 ஆம் தேதி வரை சிறையில் வைக்க அனுமதி அளித்தது.