பெங்களூர்:
தான் அரசு ஒப்பந்தப் பணி மேற்கொள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்டு, அது குறித்து புகார்கள் பல அளித்தும் நீதிபதி விச்வநாத ஷெட்டி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கோபத்தில் அவரைக் கத்தியால் குத்தியதாக கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரில் இன்று காலை லோக் ஆயுக்த அலுவலகத்தில் நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி வழக்கு ஒன்று குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, தேஜாஸ் சர்மா என்பவர் நீதிபதியைக் கத்தியால் குத்தியுள்ளார். இதை அடுத்து அவரை பாதுகாவலர்கள் உடனடியாகக் கைது செய்தனர். நீதிபதியில் உடலில் மூன்று இடங்களில் கத்திக் குத்து விழுந்துள்ளது.
Karnataka Lokayukta stabbed: Police find motive behind incident
பலத்த காயமடைந்த நீதிபதி விஸ்வநாத ஷெட்டி, உடனடியாக மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். வயிறு, நெஞ்சு, இடது கைப் பகுதிகளில் கத்திக் குத்தால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவரை மருத்துவமனையில் வந்து பார்த்து நலம் விசாரித்தார் முதல்வர் சித்தராமையா.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப் பட்ட தேஜாஸ் ஷர்மாவை போலீஸார் துருவித் துருவி விசாரித்தனர். அப்போது, அவர், தான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், கர்நாடகாவில் குடியேறி தமுக்கூரில் பர்னிச்சர் கடை ஒன்று வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அரசு அலுவலகங்களுக்கு நாற்காலி மேசைகள் என அனுப்பும் ஒப்பந்தத்திற்கு இவரிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து இவர் லோக்ஆயுக்த பிரிவில் புகார் அளித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபத்தில் இருந்திருக்கிறார் தேஜாஸ் சர்மா. இந்நிலையில் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியைப் பார்க்க காலையிலேயே அனுமதி வாங்கியவர், உள்ளே சென்றதும் கத்தியால் குத்தியுள்ளார்.
எனவே, இவர் நீதிபதியை தாக்கி காயப் படுத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.