
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு கூடுதல் பொறுப்பாக, அண்மையில் அமைச்சரவையில் இருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் கவனித்து வந்த விமானப் போக்குவரத்து துறையும் சேர்த்து வழங்கப் பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுத்ததாகக் கூறி, அக்கட்சியைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்கள் பதவியில் இருந்து விலகினர்.
பிரதமர் மோடியைச் சந்தித்து, அக்கட்சியின் அமைச்சர்களான அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர் தங்கள் ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். இருப்பினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
தெலுங்குதேசம் கட்சியின் அமைச்சர்கள் இருவரின் ராஜினாமா கடிதங்களையும் குடியரசுத் தலைவர் ஏற்று அனுமதி அளித்தார்.
இந்நிலையில், அசோக் கஜபதி ராஜு நிர்வகித்து வந்த விமானப் போக்குவரத்து அமைச்சரவையை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு ஒதுக்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்தார். அதை ஏற்று, வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்து அமைச்சரவையை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.



